புதுச்சேரியில், அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கொரோனா வார்டில் சுத்தம் செய்யப்படாமல் இருந்த கழிவறையை, தானே சுத்தம் செய்த சம்பவம், ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளிகள், அங்குள்ள கழிவறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், மருத்துவமனைக்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வார்டிற்கு சென்று, நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். சிகிச்சை அளிக்கப்படுகிற விதம் குறித்தும், உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்த அவர், சுமார் அரை மணி நேரம் நோயாளிகளிடமும் பேசினார். எல்லாம், நன்றாக இருப்பதாக தெரிவித்த மக்கள், கழிவறை மட்டும் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

உடனடியாக, கழிவறையை நேரில் சென்று பார்த்தபோது, கழிவறை சுகாதாரமற்ற நிலையில் மோசமாக இருப்பதைக் கண்ட அவர், உடனடியாக அங்கிருந்த பிரஷ்சை எடுத்து கழிவறையை சுத்தம் செய்ய, தானே களத்தில் இறங்கினார். அப்போது அங்கு வந்த ஊழியர் ஒருவர், நான் சுத்தம் செய்கிறேன் என்று கூறி, கழிவறையை சுத்தம் செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சரின் அதிரடியான இந்த நடவடிக்கைக்கு, நோயாளிகள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.




