விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து ஆகஸ்டு 5ம் தேதி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கிய நிலையில் விலைவாசி உயர்வு, அரிசி,கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தியது, உள்ளிட்டவற்றை எதிர்த்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. இதில் 25க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த எம்பிக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான போராட்டத்தின் போது கரூர் எம்பி ஜோதிமணியின் ஆடையை போலீசார் கிழித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். அந்த வீடியோவும் வைரலானது. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தற்போது தொடங்கி நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு 12ம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து ஆகஸ்டு 5ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.