கர்நாடகத்தில் அரசு வேலை கிடைக்க பெண்கள் சிலரிடம் படுக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங் கார்கே பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்எல்ஏவும் ஆன பிரியங் கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பதவிகளை விற்க அரசு முடிவுசெய்துள்ளது. பெண்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் சிலருடன் படுக்க வேண்டும். ஆண்களுக்கு அரசு வேலை வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் மந்திரி ஒருவர் இளம்பெண்ணை தனது படுக்கைக்கு அழைத்தார். அவரது ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததும் அவர் பதவி விலகிவிட்டார். நான் கூறியதற்கு இதுவே சாட்சி. இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றார்.
மேலும், கர்நாடகாவின் மின் பரிமாற்ற கழகத்தில் நடந்த 1,429 பணியிடங்களுக்கான நியமனத்தில் 600 பணியிடங்களுக்கு டீல் பேசப்பட்டு உள்ளன. உதவி பொறியாளர் பணிக்கு ₹50 லட்சம், இளநிலை பொறியாளர் பணிக்கு ₹30 லட்சம் பணம் பெற்றுள்ளனர். இதில் ₹300 கோடிவரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. கர்நாடக மின்பரிமாற்ற கழக பதவிகளுக்காக விண்ணப்பித்திருந்த 3 லட்சம் மாணவர்களின் வருங்காலத்துடன் அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.