இந்தியா சார்பில் மாலத்தீவிற்கு சுமார் 1,840 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

சீனா உடனான மோதலைத் தொடர்ந்து, அண்டை நாடுகள் உடனான நட்பை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
இந்த சூழலில், கொரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மாலத்தீவு அதிபர் இப்ராகீம் முகமது சோலீ இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக நடந்த உரையாடலின் போது மாலத்தீவு அதிபர் இது தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, இந்தியா சார்பில் மாலத்தீவு அரசிற்கு சுமார் 1,840 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா மாலத்தீவு வெளியியுறவுத்துறை அமைச்சகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், நிதி அமைச்சர் மற்றும் எஸ்பிஐ வங்கித் தலைவர் பாரத் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிதியுதவியானது மாலத்தீவு அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமான விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியை கருவூலப் பத்திர விற்பனை மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) திருப்பிச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




