இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இம்மாதத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ஆந்திர உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கட்டுக்கடங்காத வைராசால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் புதியதாக 68,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் மட்டும் 14, 492 பேருக்கும், ஆந்திராவில் 9, 393 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து,தேசிய அளவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதில் 12 லட்சத்திற்க்கும் அதிகமானோர் கடந்த 20 நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 983 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோரின் எண்ணிக்க்கை 54,849 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும், மேலும் 8 லட்சத்திற்க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை சுமார் 3.34 கோடியை கடந்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21,58,947 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 6,92,028 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.