இந்தியாவால் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 15 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளன.
ஆசியான் அமைப்பைச் சேர்ந்த சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், அவற்றுடன் வர்த்தக தொடர்பில் உள்ள இந்தியா, சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், சர்வதேச அளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை தங்கள் வசம் கொண்டுள்ளன.
இந்த நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்டதே, RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு.
கடந்த 2012ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சமீபத்தில் தொடங்கிய ஆசியான் மாநாட்டில், இந்தியாவை தவிர்த்து 15 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டதனால், இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
முன்னதாக, ரூ.1,730 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக், இயந்திர உதிரி பாகங்கள், ரசாயனம், எஃகு மற்றும் காகிதம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக இந்தியா வலியுறுத்தியது. இதனால், இந்தியாவின் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், சீனா முதலிடம் பிடிக்கும் அபாயம் ஏற்படும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நாடுகளில் இருந்து, வேளாண் மற்றும் பால் பொருட்களும் உள்நாட்டு சந்தையில் குவிக்கப்படும் அபாயமும் இருப்பதாக கூறி, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலன் கருதி ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு இந்தியா வெளியேறியது.
இந்நிலையில், காணொலி காட்சி வாயிலான நேற்றைய கையெழுத்திடுதல் கூட்டத்திலும் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியா இந்த வர்த்தக கூட்டமைப்பில் இணைய விரும்பினால், விரும்பும் தேதியில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் இதற்கு ஆதரவு அளிப்பார் என கூறப்படுகிறது.