டெல்லியில், போலி அடையாள அட்டையுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக டெல்லி காவல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் திடீர் ஆலோசனை நடத்தினார்.
அந்த, ஆலோசனைக் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் பயங்கரவாதி ஒருவர் டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு ஊடுருவி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, டெல்லி சிறப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது லக்ஷ்மி நகரில் உள்ள ரமேஷ் பார்க் பகுதியில், சந்தேகப்படும்படியாக ஒருவர் தங்கி இருப்பது தெரியவந்தது. அவரிடம் தங்களது பாணியில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது அஷ்ரப் என்பது தெரியவந்தது.
போலி இந்திய அடையாள அட்டையுடன் தங்கி இருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவர் அறையில் இருந்து ஏகே 47 துப்பாக்கி, தோட்டாக்கள், 2 பிஸ்டல், கையெறி குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்தியாவின் போலி அடையாள அட்டையுடன் பயங்கரவாதிகள் யாரேனும் டெல்லியில் தங்கி உள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.