
ஊர் பஞ்சாயத்து அனுமதி வழங்கியதை அடுத்து காதலித்து வந்த இரண்டு பெண்களையும் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார்.
ஜார்கண்ட் மாநிலம் பாந்தா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் ஓரான் என்பவர் குசம் என்கிற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். தற்போது இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சந்தீப் ஓரான் மேற்கு வங்கத்திலுள்ள செங்கல் சூளையில் பணியாற்றிய போது, உடன் பணியாற்றிய ஸ்வாதி என்கிற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. முதலில் இதற்கு சந்தீப்பின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த சம்பவம் ஊர் பஞ்சாயத்து வரை சென்றது.
பஞ்சாயத்து நிர்வாகம் முன்பு இரண்டு பெண்களையும் காதலிப்பதாகவும், அவர்களை ஒன்றாக திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சந்தீப் ஓரான் தெரிவித்தார். அதை தொடர்ந்து ஊர் மக்கள் முன்னிலையில் குசம், ஸ்வாதிக்கு திலகமிட்டு அவர் திருமணம் செய்துகொண்டார்.