கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று ஜூலை 26 இன்றுடன் 21 ஆண்டுகள் முடிவு பெறுகிறது. அன்று முதல் இந்த நாளை கார்கில் விஜய் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரி்ல் இருந்து 205 கி.மீ. தொலைவில் லடாக் மாவட்டத்தில் கார்கில் உள்ளது. இந்தியாவில் இருந்து காஷ்மீரை எப்படியாவது கைப்பற்றிட வேண்டுமென்று நீண்ட காலமாக பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. கடந்த 1999ம் ஆண்டில் இதற்காக ஒரு திட்டம் போட்டது அந்நாட்டு ராணுவம். அதாவது, தீவிரவாதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர தாக்குதல்களை நடத்தினால், அது சர்வதேச அளவில் கவனிக்கப்படும். அப்போது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கி தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பதே அந்த திட்டம்..
அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய், உடனடியாக முழு அளவில் போரை நடத்த அனுமதித்தார். இதையடுத்து, கார்கிலில் இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக தாக்கத் தொடங்கியது. 1999ம் ஆண்டு மே 3 தொடங்கிய போர், ஜூலை 26ம் தேதி வரை நடைபெற்றது..
பாகிஸ்தான் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும் கொன்று குவித்தது இந்திய ராணுவம். நமது தரப்பில் 576 வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து கார்கிலில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். ஜூலை 26, 1999ல் இந்திய ராணுவ கார்கில் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல் இந்நாள் ’விஜய் திவாஸ்’ என்று அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கார்கில் போர் நடைபெற்ற போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல போர் காட்சிகள் நொடிக்கு நொடி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்த அனைவருமே போர் பற்றியும், நாட்டின் வெற்றி பற்றியும் வீரர்களின் தியாகம் பற்றியும் பேசினர். இந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானில் மட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலகத்திற்கும் இந்தியாவின் வலிமை அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான நாடாக மாறியது.