கர்நாடகாவை சேர்ந்த பெண் பிள்ளைகளின் கல்விக் கனவு சிதைந்து விடக்கூடாது என்பதற்காக, தனது தாலியை அடகுவைத்து டிவி வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக தேசிய அளவில் பள்ளிகள் முழுவதும் 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. அதேசமயம் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கக் கூடாது என்பதற்காக, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தூர்தர்ஷன் மூலம் பள்ளி பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கதக் மாவட்டம் நரகுந்த் தாலுக்காவை சேர்ந்த பெண், வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதை கண்டு கவலையுற்று, தாலியை அடகு வைத்து டிவி வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கஸ்தூரி எனும் அந்தப்பெண், தனக்கு நான்கு பிள்ளைகள் எனவும், கணவர் தினக்கூலி பணிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அன்றாட பிழைப்புக்கே அவதிப்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு டிபி என்பது கனவே. ஆனால், தற்போது டிவி இல்லாததால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும்,கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழலில் டிவி இல்லாவிட்டால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் என ஆசிரியர் கூறியதாலும், தனது 12 கிராம் தாலியை அடகு வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான செய்திகள் வெளியாகி சர்ச்சையான நிலைய, மாநில அமைச்சர் சி.சி.பாட்டீல் 20 ஆயிரம் ரூபாயும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 50 ஆயிரம் ரூபாயையும் வழங்கி உதவியுள்ளனர். இதனிடையே, தாலியை அடகு வைத்துக் கொண்டவர் தாமாக முன்வந்து அதனை கொடுத்துவிட்டு, முடியும்போது பணத்தை கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.
மக்காளால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, திட்டங்களை வகுக்கும்போது அடித்தட்டு மக்களின் நிலையை யோசித்து முடிவெடுத்தால் இதுபோன்ற தர்மசங்கடமான சூழலை தவிர்க்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.