கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டுகிறது. திருவனந்தபுரம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் ஆறுகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பத்தனம்திட்டா பகுதியில் அமைந்துள்ள பம்பா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதேபோல, எர்ணாகுளத்தில் உள்ள முவட்டுப்புழா ஆற்றிலும் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
கோட்டயம் மாவட்டத்தில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கூட்டிக்கல்லில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், முப்படைகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இடுக்கியிலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று காலை வரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதைப்போல இடுக்கி மாவட்டத்தின் கொக்கையார் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவிலும் சில வீடுகள் மண்ணில் புதைந்தன. அதில் வசித்து வந்த மக்களும் உயிருடன் புதைந்தனர். இதில் 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். வயல்வெளிகள், விவசாய நிலங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.