அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆண்டுக்கணக்கில் நடந்த சட்ட போராட்டங்கள், கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தன. அங்கு கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இதற்கான பணிகளை விசுவ இந்து பரி ஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்க இந்த அறக்கட்டளை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
அயோத்தியில் பிரமாண்டமாக அமைய உள்ள ராமர் கோவிலுக்கு வருகிற ஆகஸ்ட் 5-ந்தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மிகவும் சிறப்பாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் பிரதமருடன் பங்கேற்கிறார். பிரதமரும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்க பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 268 பேருக்கு அழைப்பு அனுப்ப ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக 200 பேரை மட்டுமே அழைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார்.
அதன்படி சாதுக்கள்-டிரஸ்ட் உறுப்பினர்கள், விசுவ இந்து பரி ஷத்-ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 4 பிரிவுகளில் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது. இதில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோ ஷி, உமா பாரதி, சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார், ராம்விலாஸ் வேதாந்தி உள்ளிட்டோர் அழைக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவில் அமையும் இடத்தை சுற்றியுள்ள சுவர்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களால் மெருகூட்டப்படுகின்றன. அயோத்தி நகரமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.