புதுவை மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் சிக்கியவர், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயதான விஜயகுமார். தனியார் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வினியோகஸ்தராக இருந்த இவருக்கு, மதுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டம் பற்றி அறிந்து அதில் விளையாட தொடங்கிய விஜயகுமாருக்கு, ஆரம்பத்தில் வெற்றி பெற்று பணம் சம்பாதிக்கவே, சூதாட்டத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதனை விளையாடி வந்ததில், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை இழக்க ஆரம்பித்துள்ளார் விஜயகுமார். ஒரு கட்டத்திற்கு மேல் சூதாட்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல், அதற்கு அடிமையும் ஆகிவிட்டார், விஜயகுமார்.
இந்நிலையில், மனைவியின் நகைகளை வைத்தும், வியாபாரத்திற்கு வைத்திருந்த பணத்தை வைத்தும், பலரிடம் கடன் பெற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டார். கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார் விஜயகுமாருக்கு, தொழிலையும் சரியாக நடத்த முடியவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினமும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற விஜயகுமார், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது செல்ஃபோனை தொடர்பு கொண்டும், பேச முடியவில்லை.
இதுக்குறித்து, கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார் மதுமிதா. அப்போது ஏரிக்கரை ஒன்றில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றதை கண்டு, அதனுடைய பதிவு எண் கொண்டு விசாரித்தபோது, அது விஜயகுமாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. எனவே எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது விஜயகுமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதன்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் விஜயகுமார், கடைசியாக தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பதிவிட்டு இருந்தார். அவரது மனைவிக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ்-ல், என்னுடைய பிணத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நிற்கும் என்று அனுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையால் விஜயகுமார் தற்க்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலாவது நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால், குடும்பமே ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை உணர்ந்து, எதையும் ஒரு அளவிற்கு மேல் போகவிடாமல் தடுப்பது, நம் கையில்தான் உள்ளது.