ஆன்லைன் மளிகைப் பொருள் விற்பனைத் தளமான பிக் பாஸ்கெட்டின், 2 கோடி பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களின் தரவுகள் என்பவை கண்ணுக்கு தெரிந்த சொத்துக்களை காட்டிலும் அதிக மதிப்புடையதாய் மாறியுள்ளது. இதன் காரணமாகவே, இணைய குற்றச்சம்பவங்கள் இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் ஆன்லைன் மளிகைப் பொருள் விற்பனை தளமான பிக்பாஸ்கெட் செயலியின், பயனாளர்கள் 2 கோடி பேரின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைபல் எனும் ஆன்லைன் கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிக் பாஸ்கெட் நிறுவனத்தின் 2 கோடி பயனாளர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், இணைய முகவரி, கடவுச்சொல் போன்ற அனைத்து தகவல்களும் அடையாளம் தெரியாத ஹேக்கரால் திருடப்பட்டுள்ளது. மேலும், அந்த விவரங்கள் டார்க் வெப்சைட்டில், இந்திய மதிப்பில் 30 லட்ச ரூபாய்க்கு விற்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் பிக் பாஸ்கெட் நிறுவன பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அந்நிறுவனம் தரப்பில் பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.