மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
வேளாண்துறை தொடர்பாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய சீர்திருத்த மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் உரிமை பறிக்கப்படுவதாகவும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாகவும்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைக் கண்டித்தும், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கேயே பேரணியாகவும் சென்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், கட்சியின் மாநிலங்களவை குழு தலைவருமான குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரசின் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரசின் பிரபுல் பட்டேல், சமாஜ்வாடி கட்சியின் ஜெயா பச்சன் உள்ளிட்ட பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பஞ்சாப் மாநிலம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்து தலைமையில் லூதியானாவின் முல்லான்பூரில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விவசாயிகள் இணைந்து டிராக்டர் பேரணி நடத்தினர். இதேபோன்று, ஹரியானாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.