பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் எதிரொலி 30 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ரெயில் மறியல், வேளாண் நிலங்களை தீ வைத்து எரித்தல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் இந்த சூழ்நிலையில், ரெயில் மறியல் போராட்டம் எதிரொலியாக பஞ்சாப்பில் ரெயில் போக்குவரத்து முடங்கி போய் உள்ளது மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளனர்.
எனினும், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில், பஞ்சாப்பில் போராட்டத்தினை முன்னிட்டு வடக்கு ரெயில்வே 30 ரெயில்களை ரத்து செய்துள்ளது. இதேபோன்று 11 ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் நிற்பதற்கு பதிலாக, அதற்கு முன் வரும் ரெயில் நிலையத்துடன் சேவையை நிறுத்தி கொள்ளும் என்றும் ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் பயணிகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.