ராஜஸ்தானில் கட்சியிலும், ஆட்சியிலும் இணைந்து செயல்பட உள்ளதாக, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் அசோக் கெலாட் முதலமைச்சராக உள்ள நிலையில், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் தலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிமார். இதற்குபின்பு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பும், அரசுக்கு ஆதரவு அளிக்க மறுத்த சச்சின் பைலட் மாநில அரசுக்கு பெரும்பான்மை இல்லை என தெரிவித்து வந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சி எப்போது வேண்டுமானலும் கவிழ்ந்து விடும் என்ற சூழல் நிலவியது.
இதையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில துணை முதலமைச்சர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான சச்சின் பைலட்டே கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தங்களது குறைகளை எடுத்துக் கூறியவர், ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவாக இருக்க சம்மதம் தெரிவித்தார்.
தொடர்ந்து சச்சின் பைலட் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டன, நான் நிறைய விஷயங்களைக் கேட்டேன். சொல்லப்பட்ட சில விஷயங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம் எப்போதும் நிதானத்தையும், மனத்தாழ்மையையும் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அரசியலில் தனிப்பட்ட தீமைகளுக்கு இடமில்லை. நாங்கள் ராஜஸ்தானில் 5 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் ஆட்சியமைத்துள்ளோம்.
எங்கள் கவலைகள் குறித்தும், ஆட்சி தொடர்பாக நாங்கள் எழுப்பிய பிரச்சனைகள் குறித்தும் சோனியா காந்தி கேட்டறிந்தார். இது தொடர்பாக, பிரியாங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் மற்றும் அகமது படேல் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்தது வரவேற்கத்தக்கது. அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன என நினைக்கிறேன். கட்சி எங்களுக்கு பதவி வழங்கியது. அதை திரும்பபெற்றும் கொண்டது. எந்தவொரு பதவிக்கும் எனக்கு விருப்பமில்லை, ஆனால் எங்கள் சுய மரியாதை அப்படியே இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
கட்சிக்கு 18 முதல் 20 ஆண்டுகள் வரை எனது பங்களிப்பை அளித்துள்ளேன். அரசமைப்பதற்காக கடுமையாக உழைத்த மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த எப்போதும் முயற்சிப்பேன் என தெரிவித்தார்.