பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிகாரில் சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி என 3 அணிகள் களத்தில் உள்ளன.
அக்டோபர் 28, நவம்பர் 3 ஆகிய 2 தேதிகளில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. நவம்பர் 7-ம் தேதி 3-வது கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் பிகார் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்,
இது தொடர்பாக ப. சிதம்பரம் கூறும்போது, “2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வாக்குகள் குறைந்து கொண்டே வந்துள்ளன. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்து கொண்டே வருவதை இது காட்டுகிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை தொடர்ந்து 381 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில் 51 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிந்துள்ளது. இந்த 381 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது 319 தொகுதிகளில் மட்டும் தான். இந்த கணக்கில் ஒருதரம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்….. நம்மால் பாஜகவை தோற்கடிக்க முடியாதா?
முதலில் பாஜகவை மண்ணைக் கவ்வ செய்யமுடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கை பிகாரில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை மகா கூட்டணியாக இணைந்திருக்கின்றன. இந்தக் கூட்டணி பிகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார் ப.சிதம்பரம்.