ஒடிசா சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் மங்கராஜ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பிபிலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 17 ம் தேதி அன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அஜித் மங்கராஜ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் கடந்த வாரம் இவர் பரப்புரை மேற்கொண்டபோது தீடிரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அஜித் மங்கராஜ் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் கொரோனா தொற்று உறுதியானதை தொடந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்றுவந்த அஜித் மங்கராஜ் சிகிச்சைபலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Read more – குடியாத்தத்தில் கொடூர சம்பவம்…. வீட்டிற்குள் புகுந்து 3 பேரை கடுமையாக தாக்கிய சிறுத்தை..
இதையடுத்து, ஒடிசா மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.கே.லோகனி வெளியிட்ட அறிக்கையில்,ஒடிசா மாநிலம் பிபிலி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மறைவையடுத்து, வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மங்கராஜுக்கு பதிலாக புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கலாம், ஆனால் மற்ற கட்சிகள் வேட்பாளரை மாற்ற அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.