நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கும் எதிர்கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விவசாய சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.இந்தநிலையில்,விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடும்படி வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு கடிதம் எழுதினார்.இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
Read more-எதிர்க்கும் வகையிலே சட்டங்களை இயற்றினால்,எதிர்க்காமல் என்ன செய்வது? சீமான் கேள்வி
இந்தநிலையில்,அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு நேற்று பிரதமர் மோடி மற்றும் வேளாண்துறை அமைச்சர் தோமர் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்டு செயல்படுவதாக அரசாங்கம் தவறாக கருதுகிறது.ஆனால்,உண்மை என்னவென்றால் விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்தால் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு மட்டுமே தந்துள்ளனர்.மேலும்,போராட்டம் நடத்தும் எந்த ஒரு விவசாய அமைப்பும் எந்த எதிர்கட்சியுடனும் இணைந்து செயல்படவில்லை என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.




