கர்நாடக மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் காரணமாக, இ-பாஸ் இல்லாமல் யார் வந்தாலும் மாநில எல்லை மற்றும் பெங்களூர் நகருக்குள் நுழைய அனுமதி இல்லை என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இதுவரை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரமாக பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு – கர்நாடக எல்லைகளில் ஒன்றான அத்திப்பள்ளியில் ஏராளமான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் பெங்களூரு நகரில் நுழைய உரிய அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல நான்கு சக்கர வாகனத்தில் உரிய பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவ்வாறு இ- பாஸ் இல்லையெனில் அவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மேலும் தொடர்ந்து உரிய பாஸ் பெற்று பெங்களூருவில் நுழையும் ஒவ்வொருவருக்கும் கைகளில் சீல் வைக்கப்பட்டு, அவர்கள் தங்களுடைய வீடுகளில் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதோடு கேரளா, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து எல்லை பகுதிகளிலும் இதேபோல கண்காணிப்பு பணியை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. எல்லை பகுதியில் காவல்துறையினர் மட்டும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது வருவாய்த்துறை, சுகாதாரத்துறை என 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.