உத்தரப்பிரதேசத்தியில் 25 ஆயிரம் ஆதரவற்ற உடல்களை சொந்தச் செலவில் அடக்கம் செய்த முதியவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல் வறுமையில் தவிக்கிறார்.
ரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி அலி பெக் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் ஆதரவற்றவர்கள் உயிரிழந்தால் அவர்களை தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்து வருகிறார். இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை முகமது ஷெரீப் அடக்கம் செய்துள்ளார். அவரது தன்னமில்லா சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை அறிவித்து கவுரவித்தது. இந்நிலையில், முகமது ஷெரீப் முதுமையால் தற்போது நோய்வாய்ப்பட்டு, வறுமையால் மருத்துவச் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் தவிக்கிறார். படுத்தபடுக்கையாக கிடக்கும் இவரை உள்ளூர் டாக்டரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கக் கூட வசதியின்றி அவரது குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர். முகமது ஷெரீப்புக்கு மத்திய அரசோ மாநில அரசோ உதவிக்கரம் நீட்டுமா என அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதை விட பெரிய கொடுமை, இன்னும் முகமது ஷெரீப்புக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைக்கவில்லை என்பதுதான். உள்ளூர் பாஜ எம்பி லல்லு சிங் பரிந்துரை பேரில் ஷெரீப் விருதுக்கு தேர்வானார். அந்த எம்பியே தற்போது விருது கிடைக்காதது குறித்து ஆச்சரியப்படுகிறார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.