ஆந்திராவில் கருத்தரிக்காமலேயே குழந்தை பிறந்ததாகக் கூறி பெண் ஒருவர் நாடகமாடி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சூலுர்பேட்டையை அடுத்த மந்தநல்லூரைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் சசிகலா. இதில் சசிகலா நிறைமாத கர்ப்பிணி என்று கூறி திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று இருக்கிறார். அங்கு பிரசவத்திற்கு சேர்ந்ததாகவும் தனது குழந்தை காணாமல் போய்விட்டதாகவும் கூறி இருக்கிறார். இதையடுத்து மருத்துவர்களிடம் விசாரித்த போது இந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் பரிசோதனைக்கு எழுதி கொடுத்து அனுப்பியதாக தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் பிறகு சென்றவர் வந்து தனக்கு குழந்தை பிறந்ததாகவும் அதை மருத்துவமனையில் உள்ளவர்கள் விற்று விட்டதாகவும் கூறி நாடகம் ஆடி இருக்கிறார். இதுகுறித்து விசாரித்த அலிப்பிரி போலீசார் சசிகலாவை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தை பிறந்ததா என்று பரிசோதனை செய்தபோது அது பொய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சசிகலாவை விசாரித்தபோது தனக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால் கணவர் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் கர்ப்பமாக இருப்பது போன்று நாடகமாடி உறவினர்களை ஏமாற்றினேன் என ஒப்புக் கொண்டார்.