கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வந்தது திருப்பதி ஏழுமலையான் கோவிலும் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையும் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். படிப்படியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்தநிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை நேற்று திறக்கப்பட்டது. பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் கவுண்டர்களில் பெற்ற தரிசன டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் பக்தர்கள் இருட்டுவதற்குள் மலையில் இருந்து கீழே இறங்கி வர முடியும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், மலைப்பாதையில் போதிய அளவு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கான சுகாதார வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.