ராஜஸ்தானின் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் லோத்தா கிராமத்தில், போதுராம் மற்றும் அவரது சகோதரர் கெவல் ராம் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து குடிபெயர்ந்துள்ளார்கள்.இதில் கெவல் ராம் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவமானது சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. இரவு உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுக்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் விஷ ஊசி போடப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
போதுராமின் 38 வயது மகள் லட்சுமி செவிலியராகப் பயிற்சி பெற்றவர் என்றும், இவரே குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் விஷ ஊசி போட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.சம்பவம் நடந்த இடத்தில் அல்பிரஸோலம் என்ற மருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் மொத்தம் 11 பேர், அதில் 4 பெண்கள், 2 ஆண்கள், மற்றும் 5 குழந்தைகள் அடங்குவர்.இதில் லட்சுமியைத் தவிர மற்ற அனைவரின் கைகளிலும் ஊசியால் குத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன.ஆனால், லட்சுமிக்கு மட்டும் காலில் ஊசி குத்தப்பட்டுள்ள அடையாளம் இருப்பதால், இது காவல்துறையினரிடையே சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இதே குடும்பத்தைச் சேர்ந்த கெவல் ராம் மட்டும் உயிருடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையில், குடும்ப சண்டை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், போதுராமும் அவரது குடும்பத்தினரும் ஒரு பண்ணையில் ஒரு குடிசையில் வசித்து வந்ததாகவும், அந்த நிலத்தின் ஒரு பகுதியை விவசாய நோக்கங்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் கூறினர்.
விசாரணையின் போது போதுராமின் சகோதரர் கெவல் ராம் கூறியதாவது, சனிக்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டதாகவும், பின்னர் அவர் பண்ணையில் சென்று தூங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் காலையில் குடிசைக்குத் திரும்பியப் போதுதான், கெவல் ராம் தனது முழு குடும்பமும் இறந்துவிட்டதை அறிந்துள்ளார்.தற்போது அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கெவல் ராம் மற்றும் அவரது சகோதரர் ஜோத்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை திருமணம் செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போதுராமுக்கு நான்கு மகள்கள் இருந்தனர், அவர்களில் 38 வயதான லட்சுமி உட்பட இருவர், இந்தியா திரும்புவதற்கு முன்பு பாகிஸ்தானில் நர்சிங் படித்துள்ளனர்.மற்ற இரண்டு மகள்களும் ஜோத்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சமீபக் காலமாகவே குடும்பத்திற்குள் சண்டைகள் நடந்து வந்ததால், போதுராமின் மகன்களில் ஒருவர் பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார்.
இறந்த 11 பேரின் பிரேத பரிசோதனைகளையும் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இறப்புகள் ஒரு குடும்ப சண்டையின் விளைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.