உ. பி. யில் மற்றொரு ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்தது அம்மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14 ஆம் தேதியன்று நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உடல் முழுக்க காயங்களுடன் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் அலிகாரில் உள்ள ஜே என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இப்பெண்ணின் மரணத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் மற்றுமொரு கூட்டு பாலியல் பலாத்கார கொலை நடந்தேறியுள்ளது. உத்திரபிரதேசம் பாலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கடந்த 29 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மறுநாள் 30 ஆம் தேதி கையில் குளுக்கோஸ் ஊசியுடன் மிகவும் பலவீனமாக வீடு வந்து சேர்ந்துள்ளார்.
உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசாரணையில் அந்த பெண் இரண்டு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. அதனை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அம்மாநில அரசு எப்படி முற்றுப்புள்ளி வைக்க போகிறது என இனி தான் தெரியும்.