வினை தீர்க்கும் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாள், முழு முதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளாக நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பொது இடத்தில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கும், விநாயகர் ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.
சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்குபெறும் பக்தர்கள், தனிமனித இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வீடுகளிலேயே கொண்டாடுவார்கள் களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
கொரோனோ நோய்த்தொற்று அதிகம் காணப்படும் மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் இன்று காலை முதலே வழிபாடுகள் தொடங்கி விட்டன. விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள், படையல்கள் இடப்பட்டன.

டெல்லி துவாரகாவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் உள்ள பிரமாண்டமான விநாயகருக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
கன்னாட்பிளேசில் உள்ள விநாயகர் கோவில், நாக்பூர் விநாயகர் ஆலயம் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இதேபோன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி களைகட்டியுள்ள நிலையில், கொரோனா ஒழிந்து உலக மக்கள் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனிடையே, அசம்பாவிதங்களை தவிர்க்க முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




