மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஜூலை 31ம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் வாரம் இரண்டு நாட்கள் தவிர மற்ற நாட்களில் பொதுமுடக்கம் இல்லை எனவும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஆகஸ்டு ஒன்றாம் தேதி பக்ரீத் தினம் என்பதால் அன்றைய தினம் பொதுமுடக்கம் அமலில் இருக்காது என்றும், ஆகஸ்டு 31ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாநிலத்தில் தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமை ஆகஸ்ட் மாதத்தில் மேம்பட்டால், செப்டம்பர் 5 முதல் மாற்று வழிகள் குறித்து மாநில அரசு சிந்திக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.