பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம், அனைத்து மத்திய அரசு துறைகளிலும் 18 மாதங்களில் (ஒன்றரை ஆண்டுகளில்) 10 லட்சம் பேருக்கு ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இந்நிலையில், மத்திய அரசின் 2வது ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) இன்று நடைபெற்றது. அதில், காணொலி காட்சி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் உலக வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பால் இளைஞர்கள் பலன்களை பெறுகின்றனர். இந்தியாவில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
கொரோனா தொற்று மற்றும் போரால் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் உலகம் முழுவதும் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த காலம் தான் இந்தியா தனது பொருளாதார பலத்தை நிருபிப்பதற்கான பொன்னான காலம் என பொருளாதார அறிஞர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். அமிர்த காலத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அந்த உறுதிமொழியை மெய்பிக்க நீங்கள் அனைவரும் தான் “சாரதியாக” செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.