
அம்மையும் அப்பனும்
ஆதரவாய் நின்றிட்டால்
அனாதரவான மானுடம்
“அப்பப்பா! என்னா வெயிலு? இப்படியே போனா அடிக்கிற வெயிலில் எரிந்து சாம்பலானாலும் ஆகிடுவோம்” என்று அருக்காணி புலம்பினார்.
“என்ன கிழவி, இன்னைக்கு வெயிலைப் பற்றியெல்லாம் கவலைப்படற? பேய் ஏதும் பிடிச்சிக்கிச்சா, என்ன?” என்று நக்கலாக பன்னீர் கேட்டார்.
“உண்மையைத்தான சொன்னேன், நான் என்ன பொய்யா சொன்னேன்?” என்ற அருக்காணி,
“பேயும் இல்லை, பிசாசும் இல்லை” என்று சலிப்பாகக் கூறினார்.
“என்னடி இவ்வளவு சலிப்பு? சும்மா உட்கார்ந்து, வெட்டி ராமாயணம் பேசாமல் வேற வேலை இருந்தால் போய் செய்!” என்றவர் தனது வேலையில் கவனமானார்.
“அது இருந்தால் நான் ஏன் இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கப் போறேன்?” என்று அருக்காணி கேட்டார்.
“உன் பின்னாடியே வால் பிடித்த மாதிரி, நாலு அரை டிக்கெட் சுத்துமே! எங்க இன்னும் காணோம்?” என்று பன்னீர் விசாரித்தார்.
“தெரியல. எங்கேயாவது போயிருப்பாங்க.” என்று சொல்லி வாய் மூடுவதற்குள், நால்வரும் ஓடி வந்தனர்.
இவர்களின் ஓட்டத்தைக் கண்டு அருக்காணி, “என்னங்கடா இன்னைக்கு இவ்வளவு தாமதம்?” என்று கேட்டார்.
“பொங்கல் வச்சு சாப்பிட்டு வர லேட்டாகிடுச்சு, பாட்டி” என்ற அபி,
“முதலில் குடக்க தண்ணீர் கொடு. ஓடி வந்ததில் நாக்கே வறண்டு போச்சு.” என்று சட்டமாக அருக்காணி வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி கூறினாள்.
அருக்காணி, “கொஞ்சம் பொறுமையா தான் வரது? ஓடி வந்து வெட்டுக்காட வெட்டறிங்க” என்று திட்டியபடி நால்வருக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தார்.
மலர், “அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் பாட்டி. முதலில் நீ கதையைச் சொல்லு” என்று நச்சரித்தாள்.
“சொல்றேன்டி” என்ற அருக்காணி,
“இன்னைக்கு என்ன கதை வேணும்னு நீங்களே சொல்லுங்க?” என சிறுவர்களிடம் கூறினார்.
கார்த்திக், “தேவதை கதை சொல்லு, பாட்டி.” என்று ஆவலாக சொன்னதும்,
அசோக், “அது வேண்டாம்டா, பேய்க் கதை கேட்கலாம்.” என்று ஆர்வமாகக் கூறினான்.
உடனே மலர், “ரெண்டும் வேண்டாம் நீதிக் கதை கேட்கலாம்.” என்றதும்.
அபி, “அதெல்லாம் வேண்டாம். அறிவியல் கதை கேட்கலாம்.” என்றாள்.
இப்படி ஆளுக்கொன்று கூறி நால்வரும் சண்டையிட்டுக் கொள்ள ஆரம்பிக்கவும்,
அருக்காணி, “செத்த அமைதியா இருங்கடா!” என்று இவர்களின் சத்தத்தில் கத்தியவர்,
“இன்னைக்கு நானே ஏதாவது ஒன்னு சொல்றேன்.” என்றவர் கதையை ஆரம்பித்தார்.
“பல வருஷத்திற்கு முன்பு, நம்ம ஊரில் பரந்தாமன்னு வள்ளல் குணம் கொண்டவர் வாழ்ந்தார். இவரைப் போலவே இவர் மனைவி ருக்கமணியும், தர்ம காரியங்கள் செய்வதில் சிறந்தவர்.”
“இவர்களுக்குத் திருமணம் ஆகி ரொம்ப வருஷமாகியும் குழந்தைகள் இல்லை. தங்களுக்குன்னு ஒரு சிசு இல்லைனா என்ன? எனக்கு நீ, உனக்கு நான், நமக்கு அந்த சிவபெருமான் மகனா இருக்கிறான். அவன் நமக்கு போதும்னு அவங்களால் முடிந்த கைங்கர்யங்களை செய்து சந்தோஷமா வாழ்ந்தாங்க.”
இவர்களின் தன்னலமில்லாத அன்பில் திழைத்த ஈசனிடம் வந்த நாரத முனிவர், “நாராண… நாராயண” என்று நராயணனின் நாமத்தை உச்சரித்தபடி வந்தவர்,
“அம்மையப்பனுக்கு அன்னை அப்பன் சாதாரண மனிதர்களா?” என்று தனது கலகத்தை ஆரம்பித்தார்.
“வாருங்கள் நாரதரே. சிறிதும் தாமதிக்காமல் தங்களின் பணியை ஆரம்பித்துவிட்டீரோ?” என்று புன்னகையுடன் ஈசன் கேட்கவும்.
நாரத முனிவர், “இவை எமது சந்தேகமில்லை சுவாமி” என்று உடனே கூறினார்.
“தம்மையும் தம்மை இங்கே அனுப்பியவரையும் ஆட்கொண்டது எதுவோ நாரதரே?” என்று மகாதேவன் கேட்க.
“ஆச்சர்யம் எம்மை ஆட்கொண்டது, தேவா. காரணம் யாதெனில். நிலைகள் கடந்த நீலகண்டனுக்கு மானிடர்கள் எவ்வாறு அம்மை, அப்பன் ஆவார்?” என்று நாரதர் ஆரம்பித்தார்.
“தாம் இவ்விதம் அறியாதவர் போல் பேசுவது உசிதமா? தாம் யாவும் அறிந்த முக்கால ஞானி ஆயிற்றே!” என்று நாரதரைப் போலவே ருத்ரமூர்த்தி கேட்டார்.
உடனே அபி, “அதற்கு நாரதர் என்ன சொன்னார் பாட்டி?” என்று ஆவலாகக் கேட்டாள்.
“கலகம் பண்ணவே வந்தவர், வேற என்ன கேட்பார்டி?” என்ற அருக்காணி,
“பள்ளிக் கூடத்தில் உங்களுக்கு எப்படி பரீட்சை வைத்து திறனை சோதிக்கிறாங்களோ, அதே மாதிரி பரந்தாமனுக்கும் ருக்மணிக்கும் சோதனை வச்சாங்க.” என்றார்.
மலர், “மகாதேவர், இவங்களுக்கு அப்படி என்ன சோதனை பாட்டி வைத்தார்?” என ஆவலாகக் கேட்டாள்.
“மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அம்மை, அப்பனாவதுங்கிறது சும்மாவா? அதற்கான தகுதி அவங்களிடம் இருக்க வேண்டாமா?” என்று கேட்ட அருக்காணி,
“அந்தத் தகுதி இருக்கானு சோதனை பண்ண பல கஷ்டங்களை கொடுத்தார், சிவபெருமான்.” என்றார்.
அசோக், “கடவுளுக்கு இருக்கிற சக்திக்கு பரந்தாமனையும் ருக்மணியையும் பற்றி அவரே உலகத்திற்கு சொல்லி இருக்கலாமே? ஏன் அவங்களை கஷ்டப்படுத்தணும் பாட்டி?” என்று கேட்டான்.
“உளிபடாத கல் எப்படி சிற்பமாகாதோ, அதே மாதிரி தான் சோதனைகளை ஏதிர்கொள்ளாத எந்த மனிதனும் அவனுடைய நிலையை அடைய முடியாது.” என்றார் அருக்காணி.
கார்த்திக், “இதெல்லாம் சாத்தியமா பாட்டி? எதுவும் நம்புவது போல இல்லை.” என்றான்.
அதற்கு அருக்காணி, “இந்த பிரபஞ்சம் நாம் யூகிக்க முடியாத அளவுக்கு, மர்மத்தின் பிறப்பிடம் கார்த்திக். அதே மாதிரி தான், அளவிலா பக்தியும் அதன் சக்தியும்.” என்றவர்,
“குருவாயூரில் பூந்தானம் என்ற ஒரு ஏழை பக்தர் இருந்தார். அவர் தவமாய் தவமிருந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றார். அதற்கு அன்னப் பிராசனம் செய்வதற்காக, ஸ்ரீஅப்பனின் சந்நிதானத்திற்கு வந்த போது குழந்தை இறந்து விட்டது.
மனம் நொந்து போனவர், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கண்ணனையே தனது குழந்தையாகப் பாவித்தார். அதே போல் தான் பரந்தாமன், ருக்மணியின் பக்தியும்.” என்றார்.
அபி, “நீங்க மீதி கதையை சொல்லுங்க பாட்டி” என நச்சரித்தாள்.
“பரந்தாமன், ருக்மணி பக்தியை இந்த பார் போற்றணும்னு சிவபெருமான் தனது திருவிளையாடலை ஆரம்பித்தார்.
கடவுளுக்கு கைங்கர்யம் பண்றதும், வரும் பக்தர்களுக்கு அன்னதானம் பண்றதுமே, தங்களின் கடமையாக வைத்திருந்த அவர்களின் சொத்துக்கள் தூரோகத்தால் பறிபோனது. இருந்தும் மனம் தளராமல் தங்களின் பணியை தொடர்ந்தாங்க.
இந்தக் கஷ்டம் போதாதுனு கைங்கரியங்கள் செய்ய பணம் இல்லாமல் தவிக்க ஆரம்பிச்சாங்க. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தன் மகனான எம்பெருமானுக்குகான சேவை நிற்கக் கூடாது. இராப்பகலா வேலை செய்து அந்தக் காசை வைத்து, தங்களின் பக்தியை வெளிப்படுத்தினாங்க.
இன்னும் இவர்களை சோதிக்க நினைத்த ஈசன், பரந்தாமன், ருக்மணி மேல் திருட்டுப் பழியை விழ வைத்து, ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார். அதனால், தன் மகனான ஆடலரசனை காண முடியாமல் தவிச்சாங்க.
அந்த ஆதி குரு, நான்கு சுவர்களுக்குள் அடங்குபவனா? காற்றோடு காற்றாக கலந்து எங்கும் நிறைந்திருப்பவன் ஆயிற்றே! என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த குடிசையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, நாள்தோறும் பூஜை செய்து வந்தாங்க.
ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் அல்லாடிய போதும், மனதளவில் கூட இருவரும் ஈசனை நொந்து கொள்ளவில்லை.” என்றார்.
அதற்கு அசோக், “பக்தி வைத்ததுக்கா இவ்வளவு தண்டனை?” என்று கேட்டான்.
“இதற்குப் பெயர் தண்டனை இல்லை. பக்குவப்படுத்துவது. உயர் நிலையை அடைய வேணும்னா அதற்கான பக்குவம் நம்மிடம் இருக்கனும். அந்தப் பக்குவம் இல்லைனா, நாம எவ்வளவு உயரத்தை தொட்டாலும் சிறந்து விளங்கிட முடியாது.” என்றவர்,
“உங்க பாஷையில் சொன்னா, சோதனையில்லா சாதனை இல்லை!” என்று கூறினார்.
அபி, “எதற்காக இந்த கைலாஷநாதன் இங்களுக்கு இவ்வளவு சோதனை வைக்கிறார், பாட்டி?” என கவலையாகக் கேட்டாள்.
“காரணம் இருக்கு அபி” என்ற அருக்காணி,
“தூய்மையான மனதை அடைவதும், அதை தக்க வைத்துக் கொள்வதும், சாதாரணம் இல்லை. அதற்கான பயிற்சிதான் இவை.” என்றார்.
“அப்புறம் என்ன நடந்தது பாட்டி?” என கார்த்திக் கேட்டான்.
“அப்புறம் என்ன? தான் கொடுத்த அத்தனை சோதனையையும் சமாளித்து தூய்மையான மனதோடு இருந்தவர்களின் முன், அவர்களின் மகனான நீலகண்டன் தோன்றினார்.
‘உம் இருவரின் பண்பையும் பக்தியையும் திட சிந்தையையும் சோதிக்கவே இந்த சோதனை. அதில் நீர் இருவரும் வென்று விட்டீர். ஒவ்வொரு முறையும் இன்முகத்துடன் நீங்கள் விருந்தளித்ததில் யான் ஆனந்தம் கொண்டேன். உங்களின் இந்தச் சீரிய பண்பு எம்மை மட்டுமின்றி உம்மை சந்தேகித்த தேவர்களையும் கந்தர்வர்களையும் வியக்க வைத்தது.” என்று முல்லை பூ சிரிப்புடன் கூறினார்.
தனது மகனின் சிரிப்பில் மெய்மறந்த பரந்தாமனும் ருக்கமணியும், இமைக்க மறத்து அவரையே பார்த்தபடி இருந்தனர்.
இவர்களின் பக்தியில் மகிழ்ந்த உமாபதி, “இனி, நீர் இருவரும் இந்தப் பூவுலகில் துன்பப்பட வேண்டாம் தந்தையே. தங்களுக்காக சொர்க்கவாசம் காத்துக் கிடக்கிறது. வாசலில் பொன்மயமான ரதத்துடன் தேவ தூதர்கள் காத்திருக்கிறார்கள் தாயே!” என்றார்.
மகனின் உரிமையான அழைப்பில், இருவரும் கண்கள் கலங்கிப் போயினர்.
பரந்தாமன், “மகனே! எங்களுக்கு சொர்க்கம் பற்றிய அறிவில்லை. பூவுலகத்தை விட சொர்க்கலோகம் எத்தகைய சிறப்பு மிக்கது?” எனக் கேட்டார்.
“பூலோகம் கர்ம பூமி. சொர்க்கம் கற்பனைக்கும் எட்டாத சுகபோகங்கள் நிறைந்தது. பருவகால வேறுபாடுகள் இன்றி, எப்போதும் பூத்துக் குலுங்கும் மரங்கள், வேண்டியதைத் தரும் கல்ப விருட்சம் போன்றனவும், வசீகரமான அப்சரஸ் மங்கையர்களும் நிறைந்தது.
மனிதன் ஒருவன், பூமியில் செய்த நற்செயல்களின் பயனால் மட்டுமே சொர்க்கத்தை அடைய முடியும். உம்மைப் போல் தூயவர்களே சொர்க்கம் புக முடியும்!” என்றார்.
ருக்மணி, “சொர்க்கத்தின் குறை என்ன மகனே?” என்று கேட்டார்.
அதே சிரிப்புடன் ஆலங்காட்டு ஈசன், “அங்கே நாம் புண்ணியத்தை அனுபவிக்க முடியுமே தவிர, பெருக்க முடியாது. இதுதான் அங்குள்ள குறை அன்னையே!” என்றார்.
உடனே கணவன், மனைவி இருவரும், “புண்ணியம் செய்ய முடியாத உலகம் எப்படி சொர்க்கமாகும் மகனே! அத்தகைய வரம் எங்களுக்கு வேண்டாம்!” என்றனர்.
அவர்களின் தூய உள்ளத்தைக் கண்டு மகாபிரபு, “சொர்க்கத்தை வேண்டாம் என்று விட்டீர்கள். தங்களுக்கு வேறு என்ன வரம் வேண்டும் என்று கேளுங்கள்!” என்றார்.
பரந்தாமன், “இந்த பூதவுடலில் எங்களின் ஆன்மா இருந்தாலும் பிரிந்தாலும், உம் பாதத்திலேயே சரணடைய வேண்டும்.” என்றார்.
ருக்மணி, “நாங்கள் இந்த பூலோகத்தை விட்டு பிரியும் வரை, எந்தத் தடையும் இன்றி வரும் சிவ தொண்டர்களின் பசியை போக்க வேண்டும்.” என்று வரத்தை யாசித்தார்.
கார்த்திக், “என்ன மாதிரியான பக்தி இவங்களுது பாட்டி?” என்று கேட்டவன்,
“பொன் வேண்டும், பொருள் வேண்டும், மண் வேண்டும், மணிமகுடம் வேண்டும்” இப்படியெல்லாம் எதுவும் கேட்காமல், சாகும் வரை சேவை செய்யணும்னு வரத்தைக் கேட்டார்கள் பாருங்க, அங்க இருக்காங்க.” என்று பெருமையாகக் கூறினான்.
அசோக், “இதற்கு பெயர் தான் பக்தி கார்த்திக்” என்று பிரமிப்புடன் கூறினான்.
“தூய்மையான இதயமும் பக்தியும் வஞ்சமில்லாத மனதும் இருந்தாலே போதும், இறைவனின் திருவடியை அடைந்திடலாம்.” என்று அருக்காணி கூறினார்.
அதற்கு மலர், “திருக்குறளும் இதைத்தான் சொல்லது பாட்டி” என்றவள்,
“பிறவிப் பெருங்ககடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்” என்றதும்.
அபி, “இதற்கு விளக்கம் நான் சொல்றேன் பாட்டீ” என்றவள்,
“இந்த மானிடப் பிறவி என்பது ஒரு கடல் மாதிரி பாட்டி. இதில் பிறப்பு இறப்பு, சுகம் துக்கம், இன்பம் துன்பம், வெற்றி தோல்வி, பாசம் வெறுப்பு, புகழ்ச்சி இகழ்ச்சி, நன்மை தீமை, நண்பன் பகைவன் என்று ஏதோ ஒன்று மாறி மாறி வந்துக்கிட்டே இருக்கும்.
நாம் பிறக்கின்ற அந்த நொடி முதல் இறக்கின்ற நொடி வரை, இதில் ஏதோ ஒன்று அடுத்தடுத்து நமக்கு நடந்துகொண்டே தான் இருக்கிறது. அதில் மாற்றமில்லை.
அதாவது பெருங்கடலில் அலைகள் வருவது போல். நம் வாழ்வு முடியும் தருணம் வரை, இந்த வாழ்க்கை கடலின் அலைகள் ஓயப் போவது இல்லை. அப்படிப்பட்ட பெருங்கடலை கடக்க, இறைவன் மீது கொள்ளும் பக்தி ஒன்றே வழி காட்டுகிறது.
இறைவனிடம் தூய பக்தி கொண்டு அவன் தாளை வணங்குபவர் அனைவருமே வீடுபேறு என்னும் கரையைக் கடந்து விடுவர்.
இறை பக்தி இல்லாமல் வாழும் மனிதர் இந்தக் கடலின் அலைகளில் மூழ்கி, கரையேற வழி தெரியாது தத்தளிப்பவர்கள். என்று திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லியிருக்கிறார்.” என்றாள்.
அசோக், “பகவத் கீதையும் இதையே தான் சொல்லுது பாட்டி” என்றவன்,
“மந்மநா பவ மத்பக்தோ
மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யஸி யுக்த்வைவ
மாத்மாநம் மத்பராயண:”
என்ற ஸ்லோகத்தை கூறினான்.
அதற்கு கார்த்திக், “மனது முழுதும் இறைவன் எண்ணத்தால் நிறையப் பெறவேண்டும். இறைவனை அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பக்தியும் வழிபாடும் சேவையும் எப்பொழுதும் செய்து வரவேண்டும்.
அதனால் உள்ளம் இறைவனை அடைதலில் உறுதியடைகிறது. துரு நீங்கப்பெற்ற இரும்பு, காந்தத்தினிடத்தில் சேர்வது போன்று, பக்தியில் பண்பட்ட மனது இறைவனிடம் சேர்கிறது.” என்று விளக்கம் கூறினான்.
“இப்ப புரியுதா, பக்தியின் வலிமையும் தூய்மையான மனதின் திடமும்?“ எனக் கேட்டார்
காதையின் மூலம் இன்று அருக்காணி, நால்வரின் மனதிலும் நல்லெண்ணங்களையும் தூய்மையான உள்ளத்திற்கான பண்பையும் கூறி, இவர்களின் மனதில் சிறு பொறியை பற்ற வைத்தார்.
“முதியவர்கள் பாரமில்லை மக்களே! ஓர் நூலகத்திற்குச் சமம். சிறந்த எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் கற்பகத்தரு!” என்பதை எப்பொழுதும் மறந்து விடாதீர்கள்.
எப்பொருள் யார் சொன்னாலும்
அப்பொருள் மெய் கண்டு
வாழ்வாங்கு வாழ
நானிலம் செழிக்காதோ!
நன்றி