
நடந்து கொண்டு இருந்தவனுக்கு ஐம்பது மீட்டர் தூரத்தில் அதிகம் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருப்பது கண்களுக்கு தென்பட்டது.
அது ஒரு நல்ல விசாலனமான தெரு.
நமக்கோ தற்போதைக்கு வேலை வெட்டி இல்லை.
அதனால் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன்.
வேடிக்கை பார்த்தால் அப்படியே சிறிது நேரம் கழிந்து விடும்.
ஆறு மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு. கிட்டத்தட்ட 40 வீடுகளுக்கும் மேல் இருக்கும் போல தோன்றியது.
சாலையின் முன்பு பலதரப்பட்ட மக்கள் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மொட்டை மாடியின் உச்சி வெளிச்சுவரில் ஒருவன் நின்று கொண்டு இருந்தான்.
வெயில் அடித்ததால், அவனை சரியாக பார்க்கமுடியவில்லை. கைகளை ஆட்டிக்கொண்டு இருந்தான்.
அவன் ஏதோ பேசினான்.
கூட்டத்தில் இருந்த ஒருவர் வேறு ஒருவரிடம் பேசியதை கேட்க ஆரம்பித்தேன்.
“அவனுடைய முதலாளி அவனை வேலையை விட்டு தூக்கிட்டாராம். தற்கொலை செய்ய போகிறேன் என்று மிரட்டிக்கொண்டு இருக்கிறான்.”
“எவ்வளவு நேரமா பண்ணிக்கிட்டு இருக்கிறான்?”
“கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா?”
இதற்கிடையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பை சார்ந்த அஸோஸியேஷன் நிர்வாகிகள் வந்து தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.
“ரவி சார், கண்டுக்காம போயிடுவோம்?
“என்னைய்யா சுரேஷ் இப்படி பேசுறீங்க? நம்ம குடியிருப்பு மேல நின்னுக்கிட்டு இருக்கான். ஒருவேளை கீழே குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டான்னா – போலீஸ் ஸ்டேஷன் – அது – இதுன்னு அலைய முடியுமாயா?’
“நீங்க சொல்றதும் சரிதான். அவனுக்கு சமாதானம் சொல்லி பாப்போம்.”
“நிறைய சொல்லிட்டாங்க. அவன் கேட்குறமாதிரி தெரியல.”
“இப்ப என்ன, அவனுக்கு வேலை தானே வேணும். அவனுடைய முதலாளி வேலைய விட்டு நிறுத்திட்டாருன்னு தானே இப்படி ஸ்ட்ரைக் பண்ணிக்கிட்டு இருக்கான் ?”
“சொல்லியாச்சுயா. நம்ம குடியிருப்புல செக்யூரிட்டி வேலை தர தயாரா இருக்கோம். . மாசம் பத்தாயிரம் தாரேன்னு சொல்லியாச்சு”
“என்ன சார் இப்படி சொல்றீங்க. வழக்கமா 8000 ரூபாய் தானே தருவோம் .”
“இப்ப அதுவா முக்கியம். பிரச்சினையை முடிகிறதுக்கு வழிய பாருங்க”
“அப்ப என்ன சொல்றான்?”
“அந்த வேலை தான் வேணுமாம். ரொம்ப ரோஷக்காரனா இருப்பான் போல தெரியுது.”
“இப்ப நாம என்ன பண்றது?”
“போலீசும் வந்து பேசி பார்த்துட்டாங்க”
“Fire Service காரங்க கூட வந்துட்டாங்க. பின்பக்கமா போயிருக்காங்க.”
பலவிதமான குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன.
அவனை சரியாக பார்ப்பதற்கு வசதியாக ஓரமாக ஒதுங்கி நின்று கூர்ந்து பார்த்தேன்.
“அவனா இவன்?”
******************************************************
அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை நேரம் நான்கு. அப்படியே ஒரு பொடி நடை போட்டு, தெருவின் ஓரமாக அமைந்திருந்த ஒரு பூங்காவுக்குள் நுழைந்தேன்.
பூங்காவுக்குள் சென்றால், குழந்தைகள் குதூகலமாக விளையாடுவதை பார்க்கலாம். மனது தெளிவடையும். உள்ளுக்குள் நுழைந்து கொண்டு இருக்கும் இறுக்கங்கள் தளர்ந்து மனம் இலேசாகும்.
என்னுடைய எதிர்பார்ப்பின் படியே, இருபது குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். ஒரு சில குழந்தைகளின் பெற்றோர்கள் அருகில் உள்ள பெஞ்சுகளில் அமர்ந்து கொண்டு கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.
சிறிது தூரம் தள்ளி ஒரே ஒரு பெஞ்சில் மட்டும் ஒருவன் அமர்ந்து இருந்தான். அந்த பெஞ்சை விட்டால், உட்காருவதற்கு வேறு இடம் கிடையாது.
இப்படி பூங்காவுக்குள் வசதி வாய்ப்புகள் பார்த்துக்கொண்டு இருந்தால், வேலைக்காகாது.
மெதுவாக சென்று ஒரு ஓரத்தில் அமர்ந்தேன்.
அவன் ஒரு இளைஞன். வயது 25 இருக்கும். என்னைவிட இரண்டு வயது இளையவன் போல தோன்றியது.
குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டு இருந்தவன் சடக்கென என்னை திரும்பிப்பார்த்தான். அதே நேரத்தில் நானும் அவனை பார்த்தேன்.
“சார், படிச்சவரு மாதிரி தெரியுது” முதல் கேள்வியை போட்டு வைத்தான்.
“ஆமாம்பா. வாத்தியார் வேலை தான். ஒரு தனியார் டியூசன் சென்டரில் வேலை பார்த்தேன். கொரான வந்ததுல சென்டரை மூடிட்டு போயிட்டாங்க. ஒரு மாசமா வேலை இல்லை. அது சரி நீ எப்படி?”
“நான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்துகிட்டு இருந்தேன். மாசம் 9000 ரூபாய் சம்பளம். செக்யூரிட்டி வேலை. அங்கேயே தான் ஜாகை. மொட்டை மாடியிலே தண்ணீர் டாங்குக்கு கீழே காலியான இடத்தில தங்கிக்கிடுவேன். ஒரு சின்ன வீடு மாதிரி தான் இருக்கும். என்ன நினைச்சாங்கன்னு தெரியல. செகிரேட்டரிக்கு வேண்டிய ஒரு பையனுக்கு வேலைகொடுக்கணும்னு என்னை வேலையில இருந்து தூக்கப்போறதா சொல்லிக்கிட்டு இருக்காரு”
“இது என்ன கொடுமையா இருக்குது? மரியாதையா வேலை பார்க்குற வேலைகாரங்க கிடைக்கிறது குதிரைக்கொம்புங்கிற காலத்துல இப்படி யாரவது செய்வாங்களா?”
அன்றைய தினத்தில் அவனும் என்னை மாதிரி ஒரு வேலை இல்லாத வாலிபர்கள் சங்க உறுப்பினராக மாறிவிட்டான்.
சட்டென்று, பாக்கெட்டில் கைவிட்ட அவன் ஒரு பீடியை பத்த வைச்சு ஒரு இழுப்பு இழுத்தான்.
“என்னப்பா ராம்சேட் பீடியா?”
“இல்லீங்க சையது பிடிங்க”
“ராம்சேட் நல்லாயிருக்குமப்பா”
“என்னங்க, படிச்சவங்க மாதிரி இருக்கீங்க. இப்படி பீடி பத்தி பேசுறீங்க”
“ஏம்ப்பா, படிச்சிட்டா, பீடி, சிகரெட் குடிக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்குதா ? நீ எதுக்கு பிடிக்கிற; அதே மாதிரி தான் மனசு லேசானும்னா நானும் ஒரு இழுப்பு இழுப்பேன்” .
“அதுவும் சரிதானுங்க. சரி, சிகரெட்டு தானே நீங்க குடிக்கணும்?”
“அப்படின்னு ஒன்னும் இல்லை. எனக்கு பத்து வயசு இருக்கும்போது, பக்கத்து வீட்டு பையன் என்னை இழுத்துகிட்டு, கம்மாக்கரை ஆலமரத்து பொந்துக்குள்ளே உக்காரவைச்சு பீடி இழுக்கிற பழக்கத்தை கத்து தந்துட்டான். என்னமோ தெரியல, அதுல ஒரு இன்டெரெஸ்ட். அதுலயும் அந்த ராம்சேட் பீடின்னா நமக்கு உயிரு. இப்ப பொது இடத்துல புகை பிடிக்கக்கூடாதுங்கிற கண்டிஷன் இருக்கிறதால, பீடி கிடைக்கிற கடைகளை கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்குது”
“நீங்க சொல்றதும் சரிதான்.”
“சரி, பீடி எதுவும் வச்சிருக்கியா?” – அப்படியே மெதுவா வெக்கத்தை விட்டு நான் கேட்டேன்.
“இரண்டு தான் இருந்தது. ஒன்னு கையில புகைஞ்சிகிட்டு இருக்குது. அடுத்தததை தந்திடுறேன். எப்படியாவது நாளைக்கு வரும்போது நீங்க திருப்பி தந்துடனும்”.
“ஒன்னு இல்லேப்பா. ஒரு கட்டு தந்துடுறேன்”
சிரித்தவாறே, ஒரு பீடியை எடுத்து தந்தான்.
அவன் கொடுத்த சையது பீடியை இழுக்க ஆரம்பித்தேன். ராம்சேட் மாதிரி காரம் கம்மியா இருக்காது. கொஞ்சம் கூடுதலா இருக்கும் இந்த டைப் பீடியிலே. “ஓசியில் கிடைச்ச மாட்டை பல்லு பிடிச்சி பாக்குறது”, பாவத்திலும் கொடிய பாவம்.
சிறிது நேரத்தில் பிரிந்தோம்.
******************************************************
அவன் நன்றாக என் நினைவுக்கு வந்தான். அவன் தந்த பீடியும் நினைவுக்கு வந்தது. அந்த மணமும் மூக்கு துவாரங்களில் வந்து போனது.
இப்போது நன்றாக வெளியில் வந்து அவனை பார்த்தேன்.
சட்டென்று அவனுடைய குரல் கேட்டது.
“சார், வாத்தியார் சார்; நான் தான் சார்; நேத்து நாமே பார்த்தோமே”.
அவன் என்னை கண்டு பிடித்து விட்டான். அது மட்டும் இல்லாமல் நூற்றுக்கும் மேல் அங்கு நின்று கொண்டு இருப்பவர்களுக்கு கேட்கும்படியாக என்னுடைய ஜாதகத்தை வேறு வெளியில் சொல்ல ஆரம்பித்து விட்டான்.
அனைவரின் கவனமும் என் மேல் விழுந்தது. முதலில் ஒரு குற்றவாளி போல பார்த்தவர்கள், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிதாமகனாக என்னை பார்க்க ஆரம்பித்தார்கள்.
காவல் துறை ஆய்வாளர் என்னருகில் வந்தார். தீயணைப்பு துறை தலைவர் நெருங்கி வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு தலைவர் ரவி ஓடி வந்தார்.
“சார், அவனை உங்களுக்கு தெரியுமா?”
“ரொம்ப நாளா தெரியாதுங்க. நேத்து தான் அவன்கிட்டே பூங்காவுல பேசிகிட்டு இருந்தேன். அப்ப கூட வேலை போயிட்டுதுன்னு சொல்லவேயில்லை”
“இன்னெக்கி தான் வேலையை விட்டு நிறுத்தியிருக்காங்க. ரொம்ப அப்செட்டா இருக்கான். நல்ல வேலைக்காரன்னு அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சொல்றாங்க. செகிரேட்டரிக்கும் இவனுக்கும் ஒரு பிரச்சினை. அதுல வந்த பிரச்சினை தான் இது. இப்ப அவர் கிட்டே பேசியிருக்கோம். அவர் சரின்னு சொல்லியிருக்கார். திருப்பி வேலைகொடுக்கிறதுக்கு தயாரா இருக்கார். அவர் இங்கே வந்து கூட்டத்து மத்தியிலே சொல்றதுக்கு யோசிக்கிறார். கொஞ்சம் அவனை சமாதானம் படுத்துங்க” – காவல் துறை ஆய்வாளர் பேசினார்.
“சார், சொன்னா தப்பா நினைச்சிக்கிடாதீங்க. இவன் கீழே குதிச்சி வச்சிட்டான்னா, என்க புழைப்பு பாழாயிடும். கோர்ட்டு, கேஸுன்னு, அலையவேண்டிய இருக்கும். என்ன செய்றது. நீங்க தான் இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்.”
மகாபாரத கிருஷ்ணன் மாதிரி அன்று நான் அவர்களுக்கு தெரிந்தேன் என்று கூட நான் சொல்லிக்கொள்ளலாம்.
எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல. இருந்தாலும் சும்மா பேச ஆரம்பிச்சேன்.
“தம்பி, உங்க செகிரேட்டரி உங்களுக்கு வேலை போட்டு தர்றதா சொல்லியிருக்கிறாரூ. அதுக்கு நான் பொறுப்பு”
“அவரை இங்கே வந்து பேச சொல்லுங்க”
“தம்பி, அது வந்து; அவரு பாத் ரூம்ல வழுக்கி வந்து ஆசுபத்திருக்கு போயிருக்கிறாராம்”
“நீங்க பார்த்தீங்களா?”
“நான் அங்கெ போயிட்டு தான் நேரா இங்கே வரேன்”
“சார். நான் உங்களை மட்டும் நம்புறேன். நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.”
நம்முடைய வள்ளுவர் சொன்ன – “பிறருக்கு நன்மை தருமானால் பொய் சொல்வதும் சரியே” – என்ற கோட்பாட்டை நன்றாக கடைபிடித்தேன். என்னுடைய வாத்தியார் வேலையும் ஒத்துழைப்பு கொடுத்தது.
“தம்பி நான் சொன்னது சொன்னது தான்.”
இருந்தாலும் அவனுடைய தயக்கம் தீர்ந்த மாதிரி தெரியவில்லை. இன்னும் இருபது பெர்ஸன்ட் அவனை சரிக்கட்டியாச்சுன்னா போதும்.
“தம்பி, ஒரு கட்டு சையது பீடி உனக்குண்ணு வாங்கி வச்சிருக்கேன்”
கைக்குட்டையை நன்றாக சுருட்டி, நான் தரையில் இருந்து காண்பிக்க, அவனும் அது பீடிக்கட்டு தான் என்று நம்ப, அடுத்த நிமிடம், விறுவென்று படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்து, ஐந்து நிமிடங்களில் எங்கள் முன்பு வந்து நின்றான்.
பத்திரிகையாளர்கள், நியூஸ், தொலைக்காட்சி, இத்தியாதி வந்து கேள்விகள் கேட்டார்கள். என்னவோ பதிலும் சொன்னேன்.
அதாவது அப்போது நான் Cloud9ல் இருந்தேன்.
சில நிமிடங்களில் காவல் துறை ஜீப்பில் பயணித்துக்கொண்டு இருந்தேன். தம்பியும் கூட இருந்தான்.
“தம்பி, என்ன சாப்பிடுறீங்க. பிரியாணி வேணுமா சொல்லுங்க”
ஆய்வாளர் அவனை பார்த்து கேட்டார்.
மற்ற நேரங்களில் அவனுக்கு என்ன மரியாதை கிடைத்திருக்கும் என்று தெரியாது. அப்போது அவருக்கு அவன் தெய்வமாக தோன்றினான்.
அவன் பதிலை எதிர்பார்க்காமல், ஒரு ஹோட்டலின் முன்பு ஜீப்பை நிறுத்தினார். நானும் அவருடன் சென்றேன்.
இரண்டு நிமிடங்களில் இருவரும் திரும்பி வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டோம்.
பிரியாணியை அவன் கையில் தந்தார் ஆய்வாளர்.
வாங்கிக்கொண்ட அவன் என் முகத்தை கூர்ந்து பார்த்தான்.
“சார், அந்த சையது பீடி கட்டு”
“இந்தா இருக்குப்பா” – என்னுடைய பாண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்கவும், அவன் இப்போது cloud9க்கு செல்ல ஆரம்பித்தான்.
ஆய்வாளருடன் ஜீப்பில் இருந்து இறங்கியவுடன், கடையில் இருந்து பீடிக்கட்டு நான் வாங்கி வந்தது நல்லதா போயிற்று.
**********************