மூன்றாம் வகுப்பு படிக்கும் மீராவிற்கு எப்பொழுதும் போல் இன்றும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு நாளாவது தன் அப்பா தன்னை கொஞ்சுவார் , பள்ளிக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்ப்பாள். ஆனால் வழக்கம் போல் மீராவின் அப்பா குடித்து விட்டு போதையில் படுத்து கிடந்தார்.
எப்பொழுதாவது அவள் அம்மா நதியா அவளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். சில நேரங்களில் அவளுக்கும் வீட்டில் வேலை இருப்பதால் தனிமையின் துணையுடன் மீராவே பள்ளிக்கு நடந்து செல்வாள். தோழிகளின் அப்பா அவர்களை பள்ளியில் விட்டுச் செல்வதையும் , பள்ளி முடிந்தவுடன் அவர்களை அழைத்துச் செல்வதையும் ஏக்கத்துடன் பார்ப்பாள் மீரா. மீராவின் அப்பா குடித்துவிட்டு சரி வர வேலைக்கு செல்லாததால் அவளின் அம்மா வேலைக்கு சென்றுவிட்டு இரவு 6 மணிக்கு தான் வீடு திரும்புவாள். அதனால் தினமும் தனிமையின் துணையுடன் பள்ளி முடிந்து வீடு திரும்புவாள் மீரா.
ஒரு நாள் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் நடந்து கொண்டு இருந்தாள் மீரா. செல்லும் வழியில் சாலை ஓரத்தில் அவளின் அப்பா குடித்து விட்டு படுத்து கிடப்பதை பார்த்தாள். மீரா தன் அப்பா அருகில் சென்று அவரை எழுப்ப முயற்சி செய்தாள். ஆனால் போதை மயக்கத்தில் படுத்துக் கிடந்தார் மீராவின் அப்பா. உடனே மீரா தன் புத்தக பையில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து தன் அப்பாவின் முகத்தில் தெளித்தாள். போதையில் யாரோ என்று நினைத்து மீராவை வேகமாக அறைந்து விட்டார் மீராவின் அப்பா. இதை எதிர்பார்க்காத மீரா வலி தாங்காமல் அழுது கொண்டு இருந்தாள்.
அந்த வழியாக வந்த இரண்டு குடிகாரர்கள் மீராவை கவனித்து விட்டனர். பாப்பா ஏன் அழுகிறாய் ? என்று கேட்டனர். என் அப்பா என்னை அடித்து விட்டார் , நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினாள் மீரா. வா... பாப்பா நாங்கள் உன்னை உன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினர் குடிகாரர்கள். இல்லை நான் அப்பாவுடன் தான் செல்வேன் என்று அவள் அழ , வா நாங்கள் கூட்டி செல்கிறோம் என்று அவள் கையை பிடிக்க முயற்சித்தனர். அவள் அழுது கொண்டே தன் அப்பாவை எழுப்பி பார்த்தாள். ஆனால் எந்த பயனும் இல்லை. மீரா அழுது கொண்டே நடக்க முயற்சித்தாள் . அந்த இரண்டு குடிகாரர்கள் மீராவை பின் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் மீரா பயந்து கொண்டு வேறு வழியில் ஓட ஆரம்பித்தாள்.
இரண்டு குடிகாரர்களும் அவளை விடாமல் துரத்தினர். மீரா ஓடிக் கொண்டிருந்த பொழுது வழியில் பிரம்ம குமாரி ராஜயோக தியான நிலையத்திற்குள் புகுந்து விட்டாள். இதுவரை பார்க்காத இடமாக இருக்கிறதே ! ஏன் அனைவரும் வெள்ளை ஆடை அணிந்து இருக்கின்றனர் ? என மீரா மனதில் பல கேள்விகள் எழுந்தாலும் அதை கேட்க விடாமல் அழுகை அவளை அணை போட்டு தடுத்து இருந்தது. அங்கு இருந்த ஒரு பெண் ஏன் பாப்பா அழுகிறாய் ? கன்னம் ஏன் சிவந்து இருக்கிறது ? என்று கேட்டாள். இரண்டு பேர் என்னை துரத்திக் கொண்டு வருகிறார்கள் என்றாள் மீரா. அழாதே பாப்பா ! நம் அப்பா நம்மை காப்பாற்றுவார் என்று கூறினாள் அந்த பெண். என் அப்பா குடித்து விட்டு படுத்து கிடக்கிறார் அவர் எப்படி என்னை காப்பாற்றுவார் ? என மீரா கேட்க , சிரித்துக் கொண்டே அந்த பெண் உன் உடலின் அப்பா அவர் , உன் ஆத்மாவின் தந்தை ஒரே கடவுள் சிவன் உன்னை எப்பொழுதும் கை விடமாட்டார் என்று சுவற்றில் மாட்டியிருந்த ஒளிப்புள்ளி சிவனை கை காட்ட மீரா ஆச்சரியத்துயத்துடன் சிவனைப் பார்த்தாள். மீராவின் அப்பா அடித்த அடியில் மீராவின் கன்னம் சிவந்து இருந்தது. அழுகையில் அவள் கண்களும் சிவந்து இருந்தது. யார் இவர் ஒளிப் புள்ளியாக இருக்கிறாரே ! இவர் தான் என் அப்பாவா ! என்று அவள் மனம் ஆச்சரியத்திலும் நிறைந்து இருந்தது. அங்கு இருந்த பெண் பாப்பா உனக்கு உன்னுடைய வீடு தெரியுமா ? என்று கேட்க.. தெரியும் என்று மீரா தலையாட்ட , மீராவை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் அந்தப் பெண்.
6 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய மீராவின் அம்மா நதியா மீரா சோகமாக இருப்பதையும் , அவள் கன்னம் சிவந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். மீராவிடம் என்ன நடந்தது ? என்று கேட்டாள் நதியா. மீரா நடந்தவை அனைத்தையும் கூற நதியாவிற்கு அழுகையே வந்து விட்டது. அப்பாவை ஏன் எழுப்பினாய் ? நீ நேராக வீட்டிற்கு வர வேண்டியது தானே என்று நதியா கேட்க , இல்லை... அம்மா அப்பா சாலை ஓரத்தில் படுத்து கிடந்தார். அதனால தான் எழுப்பினேன். உன் அப்பாவால் உனக்கு எந்த பயனும் இல்லை , அவரால் உனக்கு பிரச்சனை தான் வரும் , அவரால் உன்னை காப்பாற்ற இயலாது என்று நதியா கூற , இல்லை... அம்மா என் அப்பா என்னை காப்பாற்றி விட்டார் என்று மீரா கூறினாள். ஆச்சரியத்துடன் ! நதியா மீராவை பார்க்க , ஆம் அம்மா என் ஆத்மாவின் அப்பா சிவ தந்தை தான் என்னை காப்பாற்றினார் என்று பிரம்ம குமாரி ராஜயோக தியான நிலையத்தை பற்றியும் தன்னை காப்பாற்றிய பெண்ணைப் பற்றியும் மீரா கூறினாள். புரிந்தும் புரியாமலும் நதியா விழிக்க எப்படியோ அந்த அப்பாவாவது உன்னை காப்பாற்றினாரே என்று தன் மகளை அணைத்துக்கொண்டு அவள் காயத்திற்கு மருந்து போட்டு விட்டாள்.
மீண்டும் இரவு 8 மணிக்கு வீடு திரும்பிய மீராவின் அப்பா போதையில் தள்ளாடி கொண்டு இருந்தார். மீராவின் வலி தெரியாமல் போதை மயக்கத்தில் படுத்து விட்டார்.
அடுத்த நாள் காலை மீரா பள்ளிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். போதையில் தெளிந்த மீராவின் தந்தை அவளின் கன்னம் சிவந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மீரா என்ன ஆனது ? என்று கேட்க.. மீரா இரண்டு குடிகாரர்கள் என்னை துரத்தினார்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் , கோபத்தில் என் மகளை யார் துரத்தினார்கள் என்று கோபப்பட்டார் , அவர்கள் தான் உன்னை அடித்தார்களா ? நான் மட்டும் இருந்திருந்தால் அவர்களை அடித்து உன் அப்பா உன்னை காப்பாற்றி இருப்பேன் என்று கோபத்தில் கத்தினார் மீராவின் அப்பா.
இல்லை... அப்பா நான் வீட்டுக்கு வரும் வழியில் நீங்கள் சாலை ஓரத்தில் குடித்து விட்டு படுத்து கொண்டு இருந்தீர்கள் உங்களை எழுப்ப முயற்சித்த போது நீங்கள் தான் கோபத்தில் என்னை அடித்து விட்டீர்கள் என்று மீரா கூற , இத்தனை நாள் மது போதையின் பழக்கத்தில் நடுங்கிக் கொண்டு இருந்த அவள் தந்தையின் கைகள் இன்று மீராவின் வலியை கண்டு நடுங்க ஆரம்பித்தது.
நீங்கள் என்னைக் காப்பாற்றவில்லை அப்பா. ஆனால் என் ஆத்மாவின் அப்பா சிவ தந்தை என்னை காப்பாற்றி விட்டார் என்று மீரா கூறினாள். மீராவின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்து இருந்த மீராவின் அப்பா தன் பையில் இருந்த மது பாட்டிலை எடுத்து சுவற்றில் ஓங்கி அடித்தார். மீராவின் கன்னத்தை சிவக்க வைத்த அதே கை இப்பொழுது சிவந்து இருந்தது ரத்தத்தால்.
தந்தையின் கையில் ரத்தம் வழிவதை பார்த்த மீரா கத்தினாள். மீராவின் சத்தம் கேட்டு வந்த நதியா தன் கணவனின் கையில் ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். நதியா தன் கணவனுக்கு மருந்து போட்டுக் கொண்டு இருக்க தன் அப்பாவை பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள் மீரா. அழாதே ! மீரா உன்னை அடித்த உன் அப்பாவின் கைக்கு இது தான் தண்டனை. இனி இந்த கையினால் மதுவை தொட மாட்டேன் என்று கூறி மீராவை அணைத்தார்.
ஆமாம்... நீ யாரோ சிவ தந்தை என்று சொன்னாயே யார் அவர் ? எங்கே இருக்கிறார் ? அவரைப் பார்த்து என் மகளை காப்பாற்றியதற்கு நன்றி கூற வேண்டும் என்று மீராவிடம் கேட்டார். மீரா நடந்தவை அனைத்தையும் கூற ஓரளவு புரிந்தும் புரியாமலும் இருந்த மீராவின் தந்தை , சரி இன்று நீ பள்ளிக்கு செல்ல வேண்டாம் நாம் மூவரும் பிரம்மகுமாரி ராஜயோக தியான நிலையம் செல்லலாம். உன் ஆத்மாவின் தந்தை உனக்கு சிறந்த தந்தையாக நடந்து விட்டார். இனி உன் உடலின் தந்தையான நானும் உனக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பேன் என்று கூறி , அவள் சிவந்த கன்னம் சிலிர்க்கும் வகையில் அன்பு முத்தத்தை தந்தார்
*************************
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree