மும்பை ஊரடங்கை நிறைவு செய்து மெல்ல இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தது. மாஸ்க் அணிந்தும் அணியாமலும் மக்கள் ஒரு வித வெறியோடு வெளியே வரத்துவங்கியிருந்தார்கள்
. இரண்டு மூன்று பெருமழை பெய்து முடிந்திருந்த ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரம் அது.
இரயில் போக்குவரத்து பற்றி உறுதித்தகவல் ஏதும் இல்லையென்றாலும் மக்கள் வழக்கம்போல பயணம் செய்தார்கள்.
கல்யாண் ஸ்டேசன் ஜனத்திரளால் நிரம்பி வழிந்தது. 7.42 லோக்கல் -கல்யாண் வந்ததுமே இறங்குவதற்குள் ஜனம் ஏறி நிறைந்து விட்டது. கல்யாண் கடைசி ஸ்டேசன். இங்கிருந்து சி.எஸ்.டி போகும் சில விநாடிகளில் இருக்கைகள் நிறைந்து நிற்கத்தொடங்கி விட்டார்கள். 7.42 க்கு இன்னும் ஆறு நிமிடங்கள் இருந்தன. துக்காராம் மிக நிதானமாகத்தான் ஏறினான். அவனுடைய சன்னலோர இருக்கையில் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. ரெகுலர் பயணிகளின் இருக்கைகளில் யாரும் உட்காரமாட்டர்கள். உட்காரவும் முடியாது. மௌனமாக, நிதானமாக தன் தோள் பையை மேலே வைத்துவிட்டு உட்கார்ந்தான். ஓரிருவர் ’சுப்ரபாத்’ என்றார்கள். புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பதில் வணக்கம் சொன்னான். துக்காராமின் ஒவ்வொரு செய்கையும் ஆர்ட் பிலிமில் வரும் கதா பாத்திரம் போல இருந்தது.
இருக்கையில் அமர்ந்த கொஞ்ச நேரத்தில் சிறிதளவு ’தம்பாக்கூ’ வை எடுத்து அதில் மிளகளவு சுண்ணாம்பு சேர்த்து நன்றாகத்தேய்த்து மீண்டும் உள்ளங்கை விரித்து தேவையற்றவைகளை அகற்றி ஒரு பெரிய சிட்டிகையாக மூன்று விரல்களால் எடுத்து லேசாக உதறி வாயில் போட்டுக்கொண்டான்.
ஒரு சிறிய உந்தலோடு வண்டி கிளம்பியது. புகையிலையின் காரத்தை கண்மூடி உள்வாங்கிக் கொண்டு மேலே வேகமாக சுழலும் மின்விசிறியைப் பார்த்தான். லேசாக வியர்த்திருந்த மூக்கின் மேல் காலைத் தென்றல் ஜில்லிட்டது.
வண்டி டோம்பிவிலியில் நின்றபோது கூட்டத்தினூடே ஒரு பர்தா அணிந்த கர்ப்பிணி பெண்ணும் அவளின் அம்மாவும் ஏறினார்கள். கூட்டத்தை விலக்கி உள்ளே வந்து அம்மா தன் மகளை உட்காரவைக்க இடம் தேடினாள்.
’ஓ…தாயி இக்டேயா – துமி பஸா’ என எழுந்து இடம் கொடுத்தான் துக்காராம். ‘சுக்ரியா பாயி ஸாப்’ என நன்றி தெரிவித்து தன் மகளை உட்கார வைத்தாள் அந்த அம்மா. எதிர் இருக்கையிலிருந்த நான்கைந்து பேர் துக்காராமுக்கு கை தட்டினார்கள். எவ்வித சலனமுமின்றி நின்றிருந்தான் துக்காராம்.
ஏனென்றால் இந்தக் கைத்தட்டலுக்கும் – பாராட்டிற்கும் உரியவர் தேசாய் காக்கா அல்லவா!இந்த வாழ்க்கையே அவர் தந்ததுதானே??????????????
இனி…………..
எல்லா மராட்டியர்களைப் போலவே அவனுடைய பெயரும் ஒரு முழ நீளமிருந்தது. ’துக்காராம் கங்காராம் பரப் (Parab)’. அனைத்து இளைஞர்களைப் போலவே தோளில் ஷோல்டர் பேக். அதில் சிறிய லஞ்ச் பாக்ஸ். மினி தண்ணீர் பாட்டில், டவல், குடை தவிர ஒரு புகையிலை பொட்டலம். காலில் ஷூ, காதில் புளூடூத் இயர்போன். வயது முப்பத்தெட்டு என்றாலும் தோற்றம் இருபத்தெட்டுதான் தெரியும். இருபுருவத்தின் நடுவில் விளக்கின் சுடர்போல குங்கும தீற்றல்.
துக்காராம் தினமும் கல்யாணிலிருந்து காலை 7.42 லோக்கல் பிடித்து அதே பெட்டி, அதே ஜன்னலோர இருக்கை. அதுவும் கடந்த பதினாறு ஆண்டுகளாக. புகையிலை போட்டுக்கொண்டு தினசரி சந்யாகாலில் வரும் குறுக்கெழுத்துக் கட்டங்களைப் போடுவான். தெரியாததை வைத்து நிறைய யோசிப்பதில்லை, அவை மாலை திரும்பும் போது.
இத்தனை வருடங்களில் தன் இருக்கையை வயோதிகர்களுக்கோ முடியாதவருக்கோ ஒரு போதும் தந்ததில்லை. ஒரு முறை, ’நோ. ஏன் தரணும், எனக்கு ஒன்னரை மணி நேர ப்ரயாணம்…’ என தொண்டை நரம்புகள் புடைக்க ஆவேசமாய் கத்தியிருக்கிறான். பெட்டியே ஸ்தம்பித்து வேடிக்கை பார்த்தது அதை.
மஸ்ஜித் பந்தரில் இறங்கி அங்கிருந்து ஒன்பது நிமிட நடையில் கடையை அடைவான். அதே தூரத்தை நாம் நடந்தால் பதினாறு நிமிடமாகும். அது பெண்களுக்கான நாவல்டீஸ் மொத்த வியாபாரக்கடை. வளையல், பாசி, நெயில் பாலிஷ், கவரிங் செயின் இத்தியாதி பல வண்ணத்தில் குவிந்திருக்கும். கடை முதலாளி சாந்திலால் தினேஷ் பர்மார் ஒரு குஜராத்தி. அவர் வரும் முன்பே கடையை திறந்து வைப்பான். கடையை பெருக்கி சுத்தம் செய்து குடிதண்ணீர் பிடித்துவைக்கவென்றே ஒரு அம்மா வந்து போவாள், முதலாளி பதினொரு மணிக்கு வருவார், அதிகம் பேசமாட்டார். லேண்ட் லைனில் ‘மஜாமா- மஜாமா’ என பதிலளித்து வியாபாரம் பேசுவார். மெல்ல ஆட்கள் வரத்துவங்குவார்கள். அவர்களை கவனிக்க கடை ஆட்கள் இன்னும் இருவர் இருக்கிறார்கள்.
துக்காராம் வங்கிக்கு போய் வருவான், தென் இந்திய நகரங்களுக்கு பெரிய அட்டைப்பெட்டிகளில் போகும் பார்சல்களை புக் செய்ய வேண்டும். இவை தவிர கடைக்கு வரும் பார்சல்களுக்காக சி.எஸ்.டி ஸ்டேசன் போக வேண்டியிருக்கும், அங்கிருந்து பார்சல்களை அடுக்க கோடவுன் சென்று ஆட்கள் அடுக்குவதை கண்காணிக்க வேண்டும்.
மீண்டும் மாலை ஆறரையிலிருந்து ஏழுக்குள் கடையடைத்து- ‘சாய்க்ருபாவில்’ ஒரு வடா-பாவும், கட்டிங் சாயும் சாப்பிட்டு 7.22 அல்லது 8.06 இரயிலை பிடிப்பான். மீண்டும் விடை தெரியாத கட்டங்கள், அல்லது காதில் மராட்டிபாடல் கேட்டு தளர்வாக கல்யாணில் இறங்கி மேலே பாலத்தில் நடக்கும் போது ’மேத்தி’ (வெந்தயக்கீரை) ஒரு கட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வான். இதில் சில மாற்றம் இருக்குமேயன்றி துக்காராமின் பதினாறு வருடகாலமும் இதே சுழற்சிதான்.
இவை தவிர அவனை வசித்து வரும் ச்சால் வீடுகளில் (மேலே சிமெண்ட் ஷீட் போட்டிருக்கும்- கிட்டத்தட்ட குடிசை மாதிரியான வீடுகள்) வருடம் தோறும் நடைபெறும் கணபதி, தஸரா, தஹிஹண்டி, தீபாவளி என பண்டிகைகளின் கொண்டாட்டங்களுக்கும் டிசம்பரில் நடைபெறும் சத்யநாராயண் பூஜாவுக்கும் பொறுப்பு துக்காராமுடையது. குழந்தைகளுக்கு பரிசளிக்க சாந்திலால் பரிசுப்பொருட்களையும் நன்கொடையும் தருவதுண்டு.
ஒவ்வொரு வருடமும் மும்பையின் மழைக்காலம் துவங்கும் முன் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மீது கருப்பு தார் சீட் விரித்து மழை ஒழுகளிலிருந்து வீட்டைக் காப்பாற்றுவதும் துக்காராமின் தலையாய வேலைகளில் ஒன்று.
துக்காராமின் மனைவி நிஷா துக்காராம் பரப். ஒல்லியாக துருதுருவென கறுப்பு பாசியில் தாலி அணிந்திருப்பாள். விழித்திருக்கும் வேலைகளில் எதையாவது செய்து கொண்டேயிருப்பாள். நல்ல ‘குரல்வளம்’ கொண்டவள். ச்சாலின் கடைசி வீட்டிலிருந்து ’ஓ மச்சி வாலா,…. பையா ஜீ ஆவோ இதர்’ என்று ரோட்டில் போகும் மீன் காரரை உரக்க கூப்பிடுவாள். அந்த குரலின் கனம் தாங்காமல் ‘ஆத்தி ஹூன் பாபி…’ என்று மீன்கார பையா பதறி ஓடி வருவான்
மற்ற பெண்களைப்போல இது எவ்வளவு அது எவ்வளவு என கேட்க மாட்டாள். என்னென்ன வேண்டுமோ அதை தட்டில் போடச் சொல்வாள். அதற்கு அவளே ஒரு விலை நிர்ணயம் செய்து தருவாள். மச்சி வாலா வாங்க மறுப்பான். ‘இன்னும் என்பது ரூபாய் தரணும்’ என்று மன்றாடுவான். பெரிய மனதுடன் இருபது ரூபாய் தருவாள். வாங்க மறுக்கிறானா, மீன்களை மீண்டும் கூடையில் எடுத்துப் போட தயங்கமாட்டாள். ‘அரே க்யா பாபி…’ என முனுமுனுத்துக்கொண்டே நகர்வான் மீன்கார பையா.
மதிய வேளைகளில் கழுத்தில் டேப்பை தொங்கவிட்டுக்கொண்டு அக்கம்பக்கத்தில் இருந்து வந்திருக்கும் நைட்டிகளுக்கு ஓரம் அடிப்பது, மடித்து தைப்பது என செய்து கொடுப்பாள். பல்பில் தண்ணீர் ஊற்றி மணி பிளான்ட்டும் பிளாஸ்டிக் வாளியில் பவளமல்லியும் வைத்திருக்கிறாள். வீட்டுக்கு முன் தொட்டியில் துளசிச் செடி வைத்திருக்கிறாள். தினசரி அதற்கு பூஜை செய்து அகர்பத்தி சொருகுவாள்.
இந்த வீடுதான் கங்காராம் தன் மகனான துக்காராமுக்கு சேர்த்து வைத்த சொத்து. கல்யாண் ஸ்டேஷனுக்கு மிக அருகில் என்பதாலும் எப்போது வேண்டுமானாலும் இவ் வீடுகளை பில்டர்கள் மொத்தமாக வாங்கி அந்த இடத்தில் அடுக்குமாடி எழுப்ப வாய்ப்பு உள்ளதால் ஒவ்வொரு வீட்டுக்கும் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 42 லட்சம் ஆகும்
அதை வீடு என்றால் மிகை. செங்கல் மாதிரியான நீளவாக்கில் ஒரே அறை. அனைத்து பொருட்களையுமே மிக கச்சிதமாக தான் வைக்க முடியும். நான்கு தட்டைக்கற்கள் மீது ஒற்றை ஆள் படுக்கும் கட்டில் அதை பெட்டி மாதிரி திறந்து தலையணை பெட்ஷீட் உடைகள் வைக்குமாறு ’ஸ்டோரேஜ்’ இருக்கும். சுவரில் சிறிய கலர் டிவி. தட்டு டம்ளர் பாத்திரங்களும் ஸ்டாண்டில் உட்கார்ந்து சுவரில் தஞ்சம் ஆகியிருந்தது. மூலையில் சிறிய மேடையில் கேஸ் ஸ்டவ்.
இதே மாதிரி செட்டப்பில் 10 வீடுகளும் வரிசையாய் நீண்டிருந்தது எல்லா வீட்டின் முன்பும் நீலக் கலரில் பிளாஸ்டிக் டிரம் இருந்த்து. அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு பொது கழிப்பறைக்கு போகவேண்டும். கூச்சத்திற்கு இடமின்றி மிக இயல்பாகவே பார்க்கப்பட்டது இந்த ‘டாய்லெட் விஸிட்.’ நிஷா சமைக்கும்போது சமையலறை. துக்காராமும் ஏழு வயது மகன் விட்டலும் இல்லாத வேளைகளில் கதவை தாழிட்டு மொரியில் குளிப்பாள். அப்போது அது குளியலறை.
கடப்பா கல் பரவிய தரை என்பதால் ஒதுக்கி வைத்து விட்டு துவைக்கவும் செய்வாள். உண்ணும் போது டைனிங் அறை. உறங்கும்போது படுக்கையறை. சில சமயம் விட்டல் அதற்குள் விளையாடவும் செய்வான். விட்டல் அருகில் உள்ள ஆங்கில பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். பள்ளியில் நடப்பதை தினமும் வந்து அம்மாவிடம் சொல்வான். மகனை ’பாலா… பாலா’ என வாஞ்சையோடு ஆரத் தழுவி முத்தமிட்ட படியே அவன் சொல்லும் ஆங்கிலத்தை கேட்பாள் நிஷா.
நிஷா அதி காலை ஐந்து மணிக்கே எழுந்து துக்காராமுக்கும், விட்டலுக்கும் சப்பாத்தி பாஜி செய்து- கணவனுக்கு மதிய உணவை டப்பாவில் அடைத்து தருவாள். துக்காராம் தினமும்காலை சாயுடன் சப்பாத்தி சாப்பிட்டு போவான். கணவனை அனுப்பி விட்ட பிறகே விட்டலை எழுப்புவாள்.
அவனை தயார் படுத்தி அருகிலுள்ள பள்ளியில் போய் விட்டு வருவாள். பிறகு பன்னிரண்டு மணிக்குள் எல்லா வேலையும் முடிந்து விடும், மற்ற பெண்களைப் போலவே மழை துவங்கும் முன் மிளகாய் மல்லி என மசாலா சாமான்களை மொத்தமாக வாங்கி காயவைத்து ஒரு வருடத்திற்கு தேவையானபடி அரைத்து வைத்துக் கொள்வாள். வடகம் வற்றல் பிழிந்து உலர்த்தி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொள்வாள்.
நெடுஞ்சாலையில் வெண்ணையாய் வழுக்கி விரையும் கார் மாதிரிதான் வாழ்க்கை இடையூறின்றி சென்று கொண்டிருந்தது. நிஷாவுக்கு கொரோனா வரும் வரை !
ஒரு அதிகாலை நிஷாவுக்கு உள்ளங்கைகள் சூடாகி கண் எரிச்சலோடு உடல் அசதியாகியது. வருடாந்திர காய்ச்சல் என்று நினைத்து மாத்திரை போட்டுக் கொண்டு வேலைகளைத் தொடர்ந்தாள்.
அன்று மாலையே கம்பளி போர்த்தி படுக்கும் அளவுக்கு காய்ச்சல் கடுமையாகி விட்டது. அதோடு விட்டலுக்கு சாய் வைத்து தந்தாள். இரவும் காய்ச்சல் விட்ட பாடில்லை, அனத்தவும் செய்தாள். துக்காராம் வெந்நீர் வைத்து கொடுத்தான். காலில் அம்ருதாஞ்சன் தேய்த்து விட்டான்.
இரு தினங்கள் காய்ச்சல் குறைவதும் அதிகமாவதுமாக இருந்தது. அண்டை வீட்டார் டாக்டரை பார்க்க அறிவுறுத்திய பிறகே துக்காராமுக்கு தீவிரம் உறைத்தது. டாக்டரிடம் போனார்கள் அங்கும் கூட்ட நெரிசலாக இருந்தது ஆர்டிபிசிஆர் க்கு டாக்டர் பரிந்துரைத்தார்.
நிஷாவுக்கு கொரோனா உறுதியானது. விட்டலை முலுண்டில் உள்ள உறவினர் வீட்டில் அழைத்து போய் விட்டார்கள்.
நிஷா பயந்திருந்தாள். அழுதவாறே ’பாலாவை பார்த்துக் கொள்ளுங்கள்’ என துக்காராமின் கையை தன் தலை மேல் வைத்துக் கொண்டாள். அவனாலும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை. முனிசிபாலிடியிலிருந்து வந்து கொரோனா எச்சரிக்கை பலகையை வாசலில் அடித்து தொங்க விட்டு பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்தார்கள். மருத்துவமனை போக பரிந்துரை கடிதம் தந்தார்கள். ’அம்பர்நாத்’ மருத்துவமனையில் அனுமதித்து சிடி ஸ்கேன் எடுத்த பின் நோயின் தீவிரம் கருதி ஐசியு வார்டுக்கு மாற்ற சொன்னார்கள்.
அந்த மருத்துவமனையில் ஐசியு வார்டும் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியும் இல்லாததால் வேறு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைத்தார்கள். எங்கும் இடம் இல்லை மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன இது குறித்து யாரும் கவலைப்படவில்லை அழுகைகள் எல்லா இடங்களிலும் வெகு இயல்பாக இருந்தது. சாலின் மூன்றாவது வீட்டிலிருக்கும் சீனிவாசராவ் துக்காராமுடன் துணைக்கு வந்திருந்தார். துக்காராமின் அழுகையைக் கண்டு கலங்காமல் சீனிவாசராவ் தைரியம் சொன்னார். ஆம்புலன்சில் நிஷாவை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அம்பர்நாத்தில் தொடங்கி முலுண்ட் வரை முயற்சித்தும் பயனில்லை.
நிஷாவுக்கு மூச்சு வாங்கியது.’கடவுளே நிஷாவை எப்படியாவது காப்பாற்றி கொடு ‘கண்களில் நீர் பெருகியது.
வரும் வழியில் பாண்டூப்பில் ஒரு மருத்துவ மனை முன்பு ‘சிவாஜி மஹராஜ் மித்ர மண்டல்’ நற்பணி மூலம் ஆக்சிஜன் தரப்படட்டது.இளைஞர்கள் துக்காராமிற்கு தைரியம் சொன்னார்கள். இரண்டு மணி நேர ஆக்சிஜன் -மூச்சு வாங்கலை ஓரளவு மட்டுப்படுத்தியிருந்தது!
அழுதபடியே சாந்திலாலுக்கு போன் போட்டான். ’பேட்டா… அழாதே வருகிறேன்’ என தன் மகளோடு ஒரு மணி நேரத்திலேயே காரில் வந்து இறங்கினார். இருவரும் டபுள் மாஸ்க் போட்டிருந்தார்கள். சாந்தி லாலுக்கு தெரிந்த மருத்துவமனை ஒன்று விக்ரோலியில் உண்டு எனவும், அங்கு ரிசர்வ் பெட் வைத்து இருப்பார்கள் எனறு சொல்லி ஆம்புலன்சை அங்கு விடச் சொன்னார்.
நிஷாவின் பயம் கூடி இருந்ததால் நோய் தீவிரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. பலவீனமாக கண்மூடிக்கிடந்தாள். தனியார் மருத்துவ மனையான அந்த கட்டிடம் பரந்து விரிந்திருந்தது. செக்யூரிட்டியில் ஐந்து நிமிடம் பேசி, அவர்கள் எங்கோ இன்டர்காமில் பேசி, கை சுத்தம் செய்த பிறகு அனுமதித்தார்கள். ஆம்புலன்ஸ் வளாகத்தில் மர நிழலில் நின்று இருந்தது
சாந்திலாலையும் துக்காராமையும் உள்ளே அனுமதித்தார்கள் ரிசப்ஷன் பெண் அதிகாரி பவ்யமாக பேசி சாந்திலாலை டைரக்டர் அறைக்கு அழைத்துப் போனாள். துக்காராம் அறைக்கு வெளியே நின்றிருந்தான்.
முழுவதுமாக பத்து நிமிடம் கழித்து டைரக்டர் வெளியே வந்தார். கூடவே கைகளில் கண்ணாடியோடு வந்த சாந்திலாலின் முகத்தைப் பார்த்த உடனே துக்காராமுக்கு தெரிந்து போயிற்று. ஆற்றாமையும் இயலாமையும் சேர்ந்து ஆவேசமாக கத்தி பெருங்குரலெடுத்து அழுதபடியே டைரக்டர் காலில் விழுந்தான் துக்காராம். ‘பேட்டா ஸாந்த ரஹோ’ என சாந்திலால் ஆறுதல் படுத்த கதறல் இன்னும் அதிகமானது.
ரிசப்ஷன் மற்றும் பில்லிங் கவுண்டரில் நின்றிருந்தவர்கள் திரும்பி பார்த்து சிலர் அருகே வந்தார்கள். ஓரிரு நர்சுகளும் வந்துவிட்டார்கள் தள்ளு கதவருகே நின்றிருந்த செக்யூரிட்டி வந்து குழுமிய சிலரை விலக்க வேண்டியதாயிற்று.
அருகே உள்ள ஐசியு வார்டின் கண்ணாடி வழியாக விலகிய திரைச்சீலையின் ஊடே இதைப் பார்த்தபடி படுத்திருந்தார் தீபக் தேசாய். உயர் கல்வித் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று 80 வயதைக்கடந்தவர். டியூட்டி டாக்டரை சைகையால் அழைத்து விவரம் கேட்டார் தீபக் தேசாய். யாரோ ஒரு இளைஞன் அவன் மனைவிக்கு ஆக்சிஜன் பெட் கிடைக்காததை சொல்லிவிட்டு நகர்ந்து போனார் பிபிஈ உடுப்பில் இருந்த டியூட்டி டாக்டர்.
இரண்டு நிமிடத்தில் மீண்டும் பெல்லை அடித்து டாக்டரை அழைத்தார் பெரியவர். அதன்பிறகு அனைத்தும் அரைமணி நேரத்துக்குள் நிகழ்ந்து விட்டது.
முதியவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு அவருடைய பெட் சானிடைஸ் செய்யப்பட்டு விரிப்புகள் மாற்றி நிஷாவுக்கு உடனே ஆக்சிஜன் கிடைத்தது. அவள் சுவாசம் சற்று ஆசுவாச பட்டிருந்தது.
தீபக் தேசாயின் கட்டாய வேண்டுகோளுக்கு ஏற்ப எல்லாம் நடந்தேறியது. கொரோனா பாதிப்பில் பெரியவருக்கு மூளை எதுவும் பாதிப்படைந்து விட்டதா என்று டாக்டர் வியப்பின் உச்சத்துக்கு போனார். கொரோனாவில் இம்மாதிரி அறிகுறிகளை தான் இதற்குமுன் பார்த்து இருக்கவில்லையே என்று குழம்பினார்.
’பொது வார்டுக்கு போன 8 மணி நேரத்திற்குப் பிறகு தாங்க மாட்டீர்கள்… மரணம் தான்’ நீட்டி முழக்க நேரமில்லை, வேலையிலும் வெகுவாகக் களைத்திருந்தார் டாக்டர்.
இன்டர்காமில் உயரதிகாரிகளுக்கு தகவல் சொன்னார். கொரோனா உடுப்போடு பெரிய டாக்டரும் சில உயர் அதிகாரிகளும் வந்தனர். மீண்டும் ஒருமுறை பொறுமையாக பெரியவருக்கு விளக்கிச் சொன்னார்கள். மருத்துவமனை வளாகத்தில் இருந்த குடும்பத்தாருக்கு தகவல் சொன்னதும் அவரின் மகள் வந்தார். முதியவர் தெளிவான ஆங்கிலத்தில் இருமலோடு சொன்னார் ’நான் வாழ்ந்து முடித்தவன் அப்பெண் வாழ வேண்டியவள்’ சில தாள்களில் கையெழுத்துப் போட்டார்.
பொதுவார்டில் மறுநாள் மதியம் 3 மணிக்கு முதியவர் இறந்து போனார். ஊசி மருந்தும் ஆக்ஸிஜனும் நிஷாவின் மூச்சை சீராக்கிக்கியது. நிஷா பிழைத்ததுக்கு மகிழ்வதா, நிஷாவுக்காக இறந்துபோன முதியவருக்காக அழுவதா இரண்டு லட்சம் டெபாசிட் கட்டிய சாந்திலாலுக்கு நன்றி சொல்வதா? உணர்ச்சி வசப்பட்ட நிலையில் துக்காராம் தன்னிலை மறந்திருந்தான்.
நிஷா நான்கு தினங்கள் கழித்து பொதுவார்டுக்கு மாற்றப்பட்டு இரண்டு வாரம் கழித்து டிஸ்சார்ஜ் ஆனாள். மருத்துவமனைக்கு ஆன மொத்த பில்லையும் சாந்திலால் தந்திருந்தார்.
மும்பையில் கொரோனா எண்ணிக்கை குறையத் தொடங்கி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது.
தொடர்ந்த ஓய்வில் மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் நிஷா, எப்போதும் இல்லாமல் கூடமாட ஒத்தாசை செய்தான் துக்காராம். சாந்திலால் வீட்டிற்கே வந்து பணிக்கு மெதுவாக வந்தால் போதும் என கேட்டுக்கொண்டு செலவுக்கு பணமும் கொடுத்தார். நிகழ்ந்த அனைத்தும் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது துக்காராமுக்கு.!!
ஒரளவு நிஷா தன் வேலைகளை தானே செய்ய முடியும் என்ற நிலை வந்த போது பணிக்கு திரும்ப நினைத்து முதலாளிக்கு தகவல் சொன்னான்……
இனி……….
7.42 லோக்கல் கல்யாண் வந்ததுமே இறங்குவதற்குள் ஜனம் நிறைந்துவிட்டது. துக்காராம் மிக நிதானமாகத்தான் ஏறினான். அவனுடைய ஜன்னலோர இருக்கையில் யாரும் உட்காரவில்லை. மௌனமாக நிதானமாக தன் தோள் பேக்கை மேலே வைத்துவிட்டு உட்கார்ந்தான். ஓரிருவர் ’சுப்ரபாத்’ என்றார்கள். புன்னகைத்து அதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கும் வணக்கம் சொன்னான். துக்காராமின் ஒவ்வொரு செய்கையும் அவார்ட் படத்தில் வரும் கதாபாத்திரம் மாதிரி இருந்தது.
வண்டி ’டோம்பிவில்லி’ யில் நின்ற போது கூட்டத்தினூடே ஒரு பர்தா அணிந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவள் அம்மாவும் ஏறினார்கள். கூட்டத்தை விலக்கி உள்ளே வந்த அம்மா தன் மகளை உட்கார வைக்க இடம் தேடினாள். ’ஓ… இக்டேயா தாயி – துமி பஸா’ என எழுந்து இடம் கொடுத்தான் துக்காராம். ‘சுக்ரியா பாயி சாப்’ என நன்றி தெரிவித்து தன் மகளை உட்கார வைத்தாள் அந்த அம்மா. எதிர் இருக்கையில் இருந்த நான்கைந்து பேர் துக்காராமின் இந்த செயலுக்கு கைதட்டினார்கள். எவ்வித சலனமுமின்றி நின்றிருந்தான் துக்காராம்..!!
******************************************