பாரதி….. 50 வயதைக் கடந்த ஆசிரியை.
வகுப்பில் மாணவ மாணவிகளைக் காந்தமாக கவர்ந்திழுக்கும் ஆசிரியை. அவர் வகுப்பென்றால் மாணவர்களுக்கு கரும்பு தின்னக் கூலி மாதிரி இரட்டை சந்தோஷம். அவர் மாணவர்களை அடிப்பதேயில்லை; திட்டுவதுமில்லை. நிறைய கதைகள் சொல்லி வகுப்பை விறுவிறுப்பாக நகர்த்துபவர். மாணவர்கள் கருத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பவர். அவர்களைக் கேள்வி கேட்கவும் தூண்டுபவர்.
ஒற்றுமையே பலத்திற்கு மற்ற ஆசிரியர்கள் தனிக் குச்சியை சுலபமாக உடைக்கலாம் ஒரு கட்டு குச்சியை உடைக்கக் கஷ்டப் படுவதையும் உதாரணம் காட்டுவர். ஆனால் பாரதியோ கையிலுள்ள சாக்பீஸ்னாலேயே உதாரணத்தைக் கண்ணெதிரே நிகழ்த்திக் காட்டுவார். தனி சாக்பீஸ் சுலபமாக உடைக்கப்படுவதையும் ஏழெட்டு சாக்பீஸைச் சேர்த்து வைத்து உடைக்க முயன்றால் கஷ்டப்படுவதையும் நடத்திக் காட்டுவார். அது மாணவர்களுக்கு சுலபமாக புரிந்தது மட்டுமல்லாமல் மறக்க முடியாத அளவு உள் மனதுள் செல்லும். உண்மை, நியாயம், நேர்மை, உழைப்பை விளக்கும் நீதிக் கதைகளை நல்ல உதாரணத்துடன் கூறி மாணவர்களுக்கு நல்வழியினைக் காட்டுபவர். பிற்கால பாரதம் மாணவர்கள் கையில்தானே. நல்ல மாணவர்களை உருவாக்கினால் நாடும் முன்னேறும்.
அன்று மாணவர்களிடம் ” உங்களுக்கு என்ன மாதிரி நபராக உருவாக மனதில் ஆசையுள்ளது” என வினவினார்.
” கலெக்டர்”
” டாக்டர்”
” இன்ஜினியர்”
” பேங்க்”
” ஸைன்டிஸ்ட்”
” டென்டுல்கர்”
” செஸ் ஆனந்த்”
” ஜனாதிபதி”
” பிரதமர்”
என டக்டக்கென நிறைய விதவிதமான பதில்கள் பாரதி காதில் அர்ச்சனைப் பூக்கள் போல விழுந்தன.
” ஏன் யாருமே முப்படைத் தளபதி , தரைப்படைத் தளபதி, மேஜர், லெப்டினென்ட், விமானப்படை பைலட், கப்பல் படை கேப்டன்ல்லாம் சொல்லமாட்டேங்கிறீங்க” அர்ச்சுனன் அம்பு பீஷ்மரைத் துளையிட்டது போல இந்தக் கேள்வி வகுப்பறையில் மாணவர்களை துளைத்தது. அய்யய்யோ….. நாம இதெல்லாம் நெனச்சதில்லையே என நிறைய மாணவர்கள் நினைக்க ஆரம்பித்தனர். இனி யாராவது கேட்டால் இதெல்லாம் சொல்லணும்னு மனதில் நினைத்துக் கொண்டனர்.
ஒரு மாணவன் கேட்டான்” டீச்சர், உங்களை மட்டும் நம்ம பள்ளினாலும் சரி, நூலகம், அரசாங்க அலுவலகங்கள் எல்லாவற்றறிலும் சுதந்திர தின விழாவில் கொடியேற்ற கூப்பிடுகிறார்களே ஏன்? மற்ற டீச்சர்களைக் கூப்பிடுவதில்லையே “
பாரதி பெருமூச்சு விட்டார். கண்கள் லேசாக கலங்கின. அவரது கடந்த கால காதல் மண வாழ்க்கை மனத் திரையில் வேகமாக ஓடியது. கல்லூரியில் ஜான்சனைக் காதலித்தது; ஜான்சன் இராணுவத்தின் மீதுள்ள ஆசையால் இளவயதிலேயே சேர்ந்து அதன் பின் கல்யாணம் பண்ணிக் கொண்டது. ஆக்ரா, ஜலந்தர் நகர வாழ்க்கைகள், கார்கில் சண்டை, அதில் எதிரிகள் விமானம் அமிர்தசரஸ் நகரத்தைத் திட்டமிட்டு குண்டு போட்டு அழிக்க ஆகாய மார்க்கத்தில் வந்தது; உடனடியாக செயல்படவில்லையெனில் இலட்சக்கணக்கான இந்தியர்கள் இறந்து விடுவர் என துணிந்து தற்கொலைப் படை முயற்சியை தனி ஆளாக விமானமோட்டி எதிரி விமானத்தைச் சுக்கு நூறாக்கி தானும் பத்து பதினைந்து குண்டுகள் உடலில் வாங்கி மரித்து, அமிர்தசரஸ் மக்களைக் காப்பாற்றி, பாரதத்தின் உயர் விருதான” பரம் வீர் சக்ரா” வை பாரதி ஜனாதிபதி கையால் வாங்கி, தனது ஆறு மாதக் குழந்தைக்குக் “கார்கில்” என பெயரிட்டு அவனையும் 18 வயசில் விமானப் படையில் சேர்த்து ” ஈன்ற பொழுதினும் மேலாய் பெருமை” பெற்று…ஊர் மக்களின் நிஜ பாரதியாய் வலம் வருகிற தனது கதையை இரண்டே நிமிடங்களில் நினைத்து முடித்துக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
டீச்சர் கண்கலங்கி அமைதியாக இருந்ததும் மாணவர்களின் கண்களில் மீண்டும் அந்த வினா எழுந்தது. எப்படி ஊர் மக்கள் நம் டீச்சரை மட்டும் உயர்வாக மதிக்கின்றனர்? கலெக்டரே எழுந்து மரியாதை செலுத்துகின்றார்?
பாரதி சுருக்கமாக தன் கணவரைப்பற்றியும் பரம் வீர் சக்ரா மதிப்பு பற்றியும் மகன் கார்கில் விமானப்படையில் சேர்ந்ததையும் கூறினார் கண்களில் ஈரக்கசிவோடு. அழக்கூடாதென நினைத்தாலும் அழுகை புற்றுப் பாம்பு போல இயல்பாக எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது.
மாணவர்கள் ஒரு நிமிடம் அந்த நிகழ்வுகளைக் கேட்டு உறைந்து போயினர்.
” நானும் இராணுவத்தில் சேர்வேன்” என சில மாணவர்கள் எழுந்தனர் கண்களில் உறுதியோடு.
” டீச்சர்…. நான் உங்களை மாதிரி ஆகணும்; இவ்வளவு சோகத்திற்குப் பின்னாலும் பிள்ளையை இராணுவத்திற்குத் தைரியமாக அனுப்பனும்” என ஒரு மாணவி எழுந்து நின்று உறுதி மொழி கூறி டீச்சரின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள். மற்ற மாணவர்களின் கைதட்டல் விண்ணை எட்டியது.
பாரதி பெருமையாக இளைய பாரதத்தினரை புன்னகையுடன் பார்த்தார். பாரதம் வலுவாக உயர்ந்தோங்கும் என்பதில் பாரதிக்கு சந்தேகமேயில்லை. நமக்கும்தான். வாழிய பாரதமே!
**********************