தயவு செய்து மீண்டும் மீண்டும் நீங்கள் என்னை அப்படிப் பார்க்காதீர்கள். நீங்கள் என்னைப் பார்க்கின்ற போது நெஞ்சென்ற கடலுக்குள் ஒவ்வொரு அலையாக சேமிக்கப்பட்ட என் அப்பாவின் ஞாபகங்கள் கண்ணீராக ஜனனிக்கின்றன. நீங்கள் மீண்டும் மீண்டும் என்னோடு ஏதோ பேச நினைத்து என் கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்கின்ற போது நான் கண்ணாடி போல உடைந்து போகிறேன்.
பஞ்சமில்லாக் காற்றை நீங்கள் கஷ்டப்பட்டு சுவாசிக்கின்ற போது இறைவனின் விந்தைக்குள் வாழ்க்கை என்று அதிகாலை பனித்துளிகள் போல கரைந்து போகிறேன். நீங்கள் மெல்ல மெல்லக் கண்களை இமைகளின் இருட்டறைக்குள் ஒளிக்கின்ற போது எனதுள்ளம் நடுநடுங்கிப் போகிறது. இது போன்ற ஓர் ஓட்டத்தில் என்னை விட்டுப் போன அப்பாவின் புகைப்படத்தைக் காட்டி ‘இவர் தான் என் அப்பா’ என்று அறிமுகம் செய்கிறேன். நீங்கள் அப்பாவுக்கு வணக்கம் வைப்பது போல என்னைக் கண்களால் பார்க்கிறீர்கள்.
நீங்கள் நேசிக்கின்ற மூச்சுக்காற்றை மெதுமெதுவாக செலவளியுங்கள். இன்னும் சிறிது நேரத்தின் பின் இருவரும் அவரவர் வாழ்க்கைக்குள் சென்று விடலாம். என் அப்பா உயிர் பிரிந்த போது என் அம்மா பசி மறந்து, தூக்கம் கெட்டு, உயிர் சிந்தி, அழுது மீளப்பிறந்ததை கண்ணூடாக கண்டவன் என்பதால் ஐயம் கொள்கிறேன்.
நீங்கள் என் கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொள்ளுங்கள். தயவு செய்து நீங்கள் மீண்டும் மீண்டும் கண்களை மூடி என்னை ஐயம் கொள்ள வைக்காதீர்கள். இங்கே என் கையில் இருக்கின்ற புகைப்படத்தைப் பாருங்கள். ‘இவள் தான் என் மகள் வெண்ணிலா’. என் மகள் போல உங்களுக்கும் ஒரு மகள் இல்லையென்றால், ஒரு மகன் இருப்பான் என்று நினைக்கிறேன். இன்னும் சில மணி நேரங்களின் பின் நீங்கள் வீட்டுக்குச் சென்று நிச்சயமாக பிள்ளைகளோடு விளையாடுவீர் என்று நம்பிக்கை கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஒரு கட்டுப்பாடான வயதைத் தொடுகின்ற வரை வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பி வருகின்ற அப்பாவுக்கு முத்தங்கள் வைத்துக் காத்திருக்கின்றனர்.
இன்னும் இன்னும் நீங்கள் ஓட நினைத்த பாதைகள் எங்கேயும் போகாமல் ஒரு நாள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றன. தயவு செய்து துளியளவும் சந்தேகமின்றி நான் பிழைப்பேன் என்று நம்புங்கள். என் மடி எங்கும் இரத்தக் கறைகள் கட்டி கட்டியாய் இன்னும் ஓயாமல் ஓடிக்கொண்ட இருக்கின்றன. தொண்டை வரை காலன் கயிற்றை வீசி உயிரை இழுக்கிறான் என்று நினைக்கிறேன்.
இமைகளுக்குள் கண்கள் நிரந்தரமாக சரணடையப் பார்க்கின்றன. முன்பை விட வேகமாக நீங்கள் கண்களை மூட முயல்கிறீர்கள்.
நிலாச்சோறு சாப்பிட்ட நாட்களை ஒரு முறை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஆழமான தூக்கத்தில் இருந்தால் கூட இதழ்கள் புன்சிரிக்கின்றன. இன்று கூட அம்மா, அப்பா சாப்பாடு வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள் என்று மறவாதீர்கள். நாட்குறிப்பைப் போல இதயத்தைப் பகிர உயிருக்கு உயிரான மனைவி காத்திருப்பாள் என்று ஒரு முறை நினைத்துப் பாருங்கள். நான் கூறுவதை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆமாம், உங்கள் இமைகளை தாண்டி கண்ணீர்த்துளிகள் பெருக்கெடுக்கின்றன. இறைவனுக்கு நன்றி!
ஒரு முறை தான் மனிதனின் வாழ்க்கையென்று இது போன்ற கட்டங்கள் நிரூபித்து விட்டுப் போகின்றன. ‘குடை கையில் இருக்கின்ற போது மழை வருவதில்லை’ என்பது போல கேள்வியும் பதிலும் ஒன்றான காத்திருப்பு மீதான வாழ்க்கையில் மரணமென்ற விடைக்கு முகங்கொடுக்க யாருமே விரும்புவதில்லை.
பள்ளிக்கு கைபிடித்து கூட்டிப்போக, பூங்காவில் தோழனாக விளையாட, காய்ச்சல் வரும் போது ஒரு வாய் ஊட்டிவிட என்று, பிள்ளைகள் வளருகின்ற ஒவ்வொரு கட்டத்திலும் தந்தையின் நிழலையே தேடுவார்கள். ஒரு பொம்மையோ? ஒரு சாக்லேட்டோ? இல்லையென்றால், இன்னைக்கு என்னை தூங்க வைக்க ஒரு கதையோ? கொண்டு வருவார் என்று காத்திருக்கின்ற பாப்பாவை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள். இருளை நீக்கும் மின்மினி மின்குமிழ்கள் போல நீங்கள் மெல்ல மெல்ல கண்களை திறக்க முயற்சி செய்கிறீர்கள். பாப்பாவின் மூச்சுக் காற்று பூங்காற்று வழியே வந்து முத்தங்கள் கொடுத்ததாக நினைக்கிறேன்.
சின்ன வயதில் நீங்கள் மழையில் நனைந்து விளையாடிய நிமிடங்களை ஒரு முறை நினைத்துப் பாருங்கள். செய்து விட்ட காகிதக் கப்பல்கள் வாசலை தாண்டுவதற்குள் மூழ்கிய தருணங்களை வாழ்க்கை என்று நம்பாதீர்கள்; கிழவன் போல தடி ஊன்றி, நனைந்து, கசிந்து நூறு தடவைகள் முயன்ற பின் இலக்கை தொட்ட மூழ்காத ஒரு காகிதக்கப்பலின் தள்ளாட்டத்தை முயற்சி என்று நம்புங்கள். வாழ்க்கை என்பது கூட முயற்சியின் தொடர்கதை தான்.
இன்னும் சில நிமிடங்களில் நிச்சயம் அது போன்ற ஒரு மழை வெளியில் பெய்யலாம் என்பது போல வானிலை என் கன்னத்தில் ஜில்லென்ற காற்றை வீசிச் செல்கிறது. நீங்களும், நானும் நனைந்து விளையாடலாம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். காகிதங்கள் என்னிடம் இல்லையென்றால் கூட காகிதங்களுக்கு ஒப்பான ஒரு சில ரூபாக்கள் என் பையில் இருக்கிறது. ரூபாக்கள் மூலம், சில காகிதக் கப்பல்கள் செய்து தருகிறேன். நீங்கள் செய்த தர்மங்களை நான் அறிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை; ஆனால், அவற்றில் ஒரு துளி கைமாறாக என் செயல்களை எண்ணிக் கொள்ளுங்கள்.
நீங்கள், இப்போது கணமாக தோன்றும் சுவாசத்தின் வழியே ஒரு தங்கமீனைப் போல மெல்ல மெல்ல உயிருக்குள் நீந்துங்கள். இன்னும் சில நிமிடங்களில் ஒரு பூவின் மென்மையான வருடலைப் போல நீங்கள் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவீர்கள்.
யாரோ ஒரு நபரின் பெயரை நீங்கள் உச்சரிப்பது போல நான் எண்ணுகிறேன். சில வருட கால வாழ்க்கையில் ஒரு சில மனிதர்களை ஊமை மொழியான கண்ணீரின் வழியே, நாம் உயிருக்கு ஒப்பாக காதல் செய்கிறோம். இன்று தான் என் வாழ்க்கையின் இறுதி நாள் என்று ஒரு கனவு ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பிற்கு முன்னர் வருமென்றால், இப்பூமியில் எந்தவொரு மனிதனும் பகையோடு இறக்க மாட்டான் மற்றும் சின்னச் சின்ன காரணங்களுக்காக சொந்தங்களை இழக்க மாட்டான். மனதின் மொழி நான் கற்றுக் கொள்ளவில்லை; இச்சமயம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.
‘நிறமற்ற வெளியில் அருவமான மனிதர்கள் நிரந்தரமான ஓய்வை நாடிச் செல்ல வா!’ என்று அழைக்கலாம். நீங்கள் ரூபமற்ற குரலை நம்பி, காத்திருக்கின்ற ப்ரியமான இதயங்களின் அன்பென்ற கண்ணாடியில் பிரிவென்ற கூழாங்கற்களை வீசி உடைத்து விடாதீர்கள்.
இச்சமயம், ஒரு பார்வையிழந்த அம்மா தனது கையை பிடித்து பாதையைக் கடந்து போக தனக்கு உதவி செய்ய யாரோ ஒரு மனிதன் வரலாம் என்று காத்திருக்கலாம்; இன்று இல்லை என்றால் கூட, நாளை குணமாகிய பின் நிச்சயம் அம்மனிதன் நீங்களாகக் கூட இருக்கலாம். அநாதையான ஒரு சிறுமி வாழ்வாதாரப் பள்ளியில் பசி என்ற பாடத்தில் ‘அ’ எழுத, தனது பேனைகளை விலை கொடுத்து வாங்க ஓர் அண்ணன் வரலாம் என்று ஏங்கலாம்; நிச்சயம் நீங்கள் வெளியூர் பயணம் மேற்கொள்கின்ற போது இப்படிப்பட்ட ஜீவன்களை கடந்து போயிருப்பீர்கள்; இல்லையென்றால், இன்னும் சில நாட்களில் சந்திப்பீர்கள். பேரன்பென்ற ஒன்றுக்குள் சரணடைய காத்திருக்கின்ற இவ் வாழ்க்கையின் பூரணத்தை உணராமல், மரக்கிளைகளுக்குள் சிக்கிய ஒரு காற்றாடி போல நீங்கள் சுவாசிக்க சிரமப்படுவது என்னை கண்ணீர் மல்க வைக்கிறது.
இரவில் கூட்டிற்குள் தஞ்சம் கொண்டு குடும்பமாக சிரித்து மகிழும் சின்னச் சின்ன பறவைகளின் கீச்சொலிகள் என் காதில் விழுகிறது. நேற்று இரவு நீங்களும் இப்படி பேசிச் சிரித்த மனிதர்களின் முகங்களை ஒரு முறை கண்களுக்கு முன் நிறுத்துங்கள். கருப்பு வெள்ளை புகைப்படம் போல பழைய நினைவுகள் தோன்றித் தோன்றி மறையும் போது, இன்னும் சற்று தூரம் வாழ்க்கை என்ற பூங்காற்றை அள்ளிப்பருக வேண்டுமென்ற ஆசை மனதிற்குள் முளைக்கிறது. இனி, பேரன்பின் வீரம் மூச்சுக்காற்றை தாங்கிப் பிடிக்குமென்று நம்புகிறேன்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் மனிதநேயம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், சுயநலம் என்ற போர்வையில் சாவிகள் தொலைத்த பூட்டுகள் போல ஆபத்தில் கூட உதவி செய்ய முன் வர மறுக்கிறது.
“ஒரு ஜோசியக்கிளியின் சொண்டில் எதிர்காலத்தை அடமானம் வைப்பதற்கு வாழ்க்கை ஓர் அழுகிய திராட்சையல்ல. மாறாக, பேரன்புள்ள இதயங்களில் மனிதம் ஆலயம் கட்டி வாழும் வீடு.” இப்படி என்றோ நான் வாசித்த ஒரு புதுக்கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது. துடுப்பை தொலைத்த ஒரு தோணியைப் போல வாழ்க்கை கதை மறந்த மனிதர்களின் நிலையை நினைக்கின்ற போது ஒரு கோமாளி போல நான் புன்னகை செய்கிறேன்.
முகத்தில் காயங்கள் போல சில கீறல்கள் தோன்றி இருக்கின்றன; நிச்சயம் தங்களது ஒளிமயமான முகத்தை அவைகள் பழுதுபடுத்தாது. கடலைப் போல வியர்த்துக் கொட்டும் மேனியை என் கைக்குட்டை கொண்டு துடைத்து விடுகிறேன்; நீங்கள் என்னை சிரமப்படுத்துவதாக தயவுசெய்து ஒரு துளியளவும் நினைத்து விடாதீர்கள். மறுத்துப்போன கால்கள் வலுப்பெறுமென்ற நற்பாசையில் என் கைகளால் ஊன்றி விடுகிறேன்; இது போன்ற ஒரு நிலையில் நீங்கள் என்னை சந்தித்திருந்தால் கூட, இப்படித்தான் செய்திருப்பீர்கள்.
என்னை இதயத்தில் வரைய நினைக்கின்ற கண்களைப் பார்த்து என் கண்களால் கேள்வி அளக்கிறேன். இச்சமயம், சிந்தையறியாமல் தங்களது கீழ், மேல் இதழ்கள் ஒன்றாக ஒட்டி வரைகின்ற புன்னகை எவ்வளவு அழகாக இருக்கிறது; என் நெஞ்சம் நிறைகிறது. ஒரு தாய் பிள்ளைக்கு பாலூட்டும் செயல் போல சொட்டுச் சொட்டாய் தாகமெடுத்த தொண்டைக்குள் நீர் புகட்டி விடுகிறேன். என்னை அந்நிய மனிதனாக எண்ணிக் கொள்ளாமல் பெயர், விலாசம் கூறிக்கொள்ள தவறிய ஒரு புதிய நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
சைரன் ஓசை இன்னும் மெளனமாகவில்லை என்று ஐயம் கொள்ளாதீர்கள். உளறும் பெறுமதியான சுவாசங்கள் சிரமப்படாமல், கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கட்டும் என்று நீங்கள் அணிந்திருக்கும் இறுக்கமான சட்டையின் பொத்தான்களை திறந்து விடுகிறேன். நீங்கள் அவசர சிகிச்சை அறையை நோக்கி நகர ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என் கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்ட இருக்கிறீர்கள்; இனி ஐயமின்றி தளர்த்தி விடுங்கள்.
நீங்கள் கை தவறிய கைபேசி மற்றும் பணப்பை என்பவற்றை பத்திரமாக வைத்தியசாலையில் ஒப்படைத்திருக்கிறேன். நீங்கள் சிகிச்சை முடிந்து நினைவிற்கு வந்த பின் ஒப்படைப்பார்கள். நீங்கள் கண் திறந்து பார்க்கின்ற போது சொந்தங்கள் மற்றும் சகாக்கள் எல்லாம் சூழ்ந்து இருக்கின்ற சபையில் மறக்காமல் என்னையும் ஒரு தடவை நினைத்துக் கொள்ளுங்கள். என்றாவது, ஒரு நாள் உங்கள் மகனோ? அல்லது மகளோ? கதை கேட்டால் நான் சொன்ன அன்பான மனிதநேய கட்டுக்கதைகளை நீதிக்கதைகளாக மறக்காமல் ஒரு தடவை சொல்லுங்கள்.
எங்கே போவது என்று தெரியாமல் ரொம்ப தூரமாக போய்க் கொண்டிருக்கின்ற என்னை ஓர் அம்மாவும் – மகனும் (மரியாள் – இயேசு) பார்த்துக் கொண்ட நின்றனர்.