உண்ணாத்தாள் மனம் பதைத்துப் போய் நிற்கிறாள். அடுத்த நாளிலிருந்து 21 நாளைக்கு ஊரடைப்பு என்று அரசாங்கம் உத்தரவு போட்டுவிட்டது. கொரொனா கொள்ளை நோய் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்ட முயற்சி. முதல் நாளே தெரு வெறிச்சோடி மயானமாகத் தோன்றுகிறது.
மூலைக்குளத்தில் உள்ள அவளுடைய சிறிய வீட்டின் முற்றத்தில் இருந்து காற்று வீசுகிறது. அறுநூறு சதுர அடி கொண்ட சிறிய வீடு. ஒரு காலத்தில் குளமாக இருந்த பகுதியைத் தூற்று வீடுகள் கட்டினர். அதனாலேயே இந்தப் பகுதி மூலைக்குளம் ஆயிற்று. இது புதுச்சேரியின் கலகலப்பான பகுதி. இப்பொழுது மூலைக்குளத்தில் காலி மனைகளும் இல்லை. கட்டின வீடுகளும் விலைக்கோ வாடகைக்கோ கிடைக்காது. இந்திரா காந்தி சிலையிலிருந்து பரந்த நேர் தெருவில் நடந்தால் முடிகிற இடம். வலதும் இடதுமாகப் பெரிய குறுக்குச் சாலை. ஒன்று திருச்சி போகிற பஸ் சாலை. மற்றது திண்டிவனம் – சென்னை செல்கிற பஸ் பாதை.
அடுத்த நாளிலிருந்து இவளுடைய இட்லி கடையை எப்படி நடத்துவது. திண்ணையில் உட்கார்ந்து வாடிக்கையாளர்கள் காலைச் சிற்றுண்டி இட்லியைச் சாப்பிட்டுப் போவார்கள். திண்ணையைத் தாண்டி ரேழி. ரேழியின் பக்கவாட்டில் சிறிய அறை. ரேழியைத் தாண்டி முற்றம். சிறிதாகக் கூடம், கழிப்பறை, குளியலறை. பின்பக்கக் கொல்லையில் நான்கு தென்னை மரம், வாழைமரம், முருங்கை மரம். அவளுக்குத் தொடர்ந்து காயும் கனியும் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களுடைய உலகம் இது.
முற்றத்தில் உண்ணாத்தாள் கன்னத்தில் கைவைத்துக் கவலையோடு உட்கார்ந்திருக்கிறாள்.
என்னடியாச்சு? கன்னத்தில் கை வச்சு உட்காராதேடீ. என்ன கவலை உனக்கு? அம்மா கயிற்றுக் கட்டிலில் படுத்தவாறே கேட்கிறாள். அவளுடைய பாதி நாள் கயிற்றுக் கட்டிலிலும் மீதி நேரம் கொல்லை வாசற்படியிலும் கழிந்து விடும். காலையில் எட்டு மணி வரை உண்ணாத்தாள் இட்லி வியாபாரத்தைச் செய்ய, இவள் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டவர்களிடமிருந்து பணம் வாங்கும் பொறுப்பைச் செய்வாள்.
அம்மா நாளையிலிருந்து 21 நாளைக்கு ஊரடங்கு சட்டம் போட்டிருக்கிறார்கள். நம்ம ஊருக்கு மாத்திரம் தானா? எல்லா ஊருக்குமா? “அம்மா, இந்தியா முழுக்க ஊரடங்கு சட்டம் தான். எல்லா இடத்துக்கும் தான்”
நம்ம பொழப்பு என்னவாகிறது அம்மா. இட்லி கடை போட முடியாதும்மா. 2 பெரிய கல் சட்டி இட்லி மாவு அரைச்சுட்டேன். 150 இட்லி வரும். இவ்வளவு இட்லி மாவை என்ன செய்யறது?
சின்ன அடுக்குகளில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வை. புளித்துப் போகாது. பொங்காது. ஆமாம், உன் தம்பி, கூறு கெட்டவன், குப்பண்ணா கடையும் மூடிவிடுமா?
ஆமாம் அம்மா, பெரிய மால்கள், கடைகளிலிருந்து என் திண்ணை இட்லி கடை வரை மூடிவிடும்.
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி. பாவி மகன் சாராயத்தை ஊத்தி ஊத்திக் கொடுத்துக் குடும்பங்களை நாசப்படுத்துகிறான். அழ அடிக்கிறான். தெய்வம் தான் அவனுக்கு இந்தத் தண்டனையைக் கொடுத்திருக்கு. கடை ஓடாம நன்னா கஷ்டப்படட்டும்.
தட்டாஞ்சாவடியில் இருக்கும் அவனுடைய சாராயக்கடை பாதுகாப்புப் படையினரின் (போலீஸ்) குடியிருப்பின் அருகில் உள்ளது. அவன் போலீசை விலைக்கு வாங்கும் பெரிய கேடி.
உண்ணாத்தாவின் அப்பா, நடுமாத்தாவின் கணவன் கருப்பண்ணன் நகராட்சிக் கழகத்தில் (முனிசிபாலிட்டியில்) சேவகனாகச் சேர்ந்தான். தபால் கல்வி மூலம் படித்து பட்டம் பெற்று அலுவலகத் தேர்வுகள் பாஸ் செய்து மேல் நிலை குமாஸ்தாவாகப் பணி உயர்வு பெற்றார். வேலையில் இருந்த காலத்தில் மூலைக்குளத்தில் இடம் வாங்கிச் சிறியதாக வீடு கட்டினார். ஓய்வு பெறுவதற்கு முன் பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். மாப்பிள்ளை ஃப்ரான்ஸில் வேலை கிடைத்துப் போகிறேன் என்று போனவன் திரும்பி வரவில்லை. அங்கே ஒருத்தியை மணந்து குடித்தனம் போட்டு விட்டான்.
பிள்ளை குப்பண்ணா ஒரு தருதலையாகப் போவான் என்று கருப்பண்ணன் நினத்திருக்கவில்லை. பட்டப்படிப்புக்குச் சென்னை அனுப்பினார். கூடா நட்புக்களும் ஜாதிவிட்டுக் காதலியுமாகப் பட்டப் படிப்பைக் காற்றில் பறக்கவிட்டுத் திரும்பி வந்தான் அவன்.
மனது வெறுத்துப் போன கருப்பண்ணன் வில்லியனூரில் அவனுக்கு ஒரு சிறு வீடு வாங்கிக் கொடுத்து, வீட்டில் அவனைச் சேர்க்காமல் அவன் பிழைப்பை அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று அனுப்பிவிட்டார். நேர்மையும் கடும் உழைப்புமாக வாழ்ந்த அவர் மனதிற்குள் வருந்தி, பிள்ளையின் தான்தோன்றித் தனமான வாழ்வை எண்ணி வேதனைப்பட்டுக் காலம் கடத்தினார்.
அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்ற பொழுது கிடைத்த பணத்தில் நடுமாத்தாளுக்கு எட்டு பவுனில் காசுமாலையும் உண்ணாத்தாளுக்கு ஐந்து பவுனில் காப்பும் வாங்கிப் போட்டார்.
நடுமாத்தாளுக்குக் குடும்ப ஓய்வூதியப் பணம் கிடைக்கிறது. மாதாமாதம் நேரில் போய்ப் பென்ஷனை ரூபாயாகக் கையில் வாங்கிக் கொண்டு வருகிறாள்.
அம்மா உன் பணத்தை ஜாக்கிரதையாக எங்கே வச்சிருக்கே?
கவலைப்படாதேடீ, தலைகாணி பஞ்சுக்கு நடுவில் ஒரு துணியில் சுற்றி வைத்துத் தலைகாணியை உறையோடு தைச்சிருக்கேன்.
அம்மா. நகைகள்? காசுமாலை காப்பு தவிர மேலும் சங்கிலிகள் வளையல்கள் உள்ளன. ஒரு அலுமினியச் சம்படத்தில் போட்டு அடுப்பு சாம்பல் ரொப்பி வைச்சிருக்கியே பெரிய வாளி, அதன் அடியில் புதைச்சு வைச்சிருக்கேன். அவன் வந்தால் நகை, பணம் ஒண்ணும் அவனுக்குக் கிடைக்காது. பயப்படாதே.
உண்ணாத்தாளுக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களுடைய ஃபோன் கைப்பேசியில் வருகிறது.
“ஆத்தா, இட்லி கடையை மூடாதீங்க. விடியற்காலை ஐந்து மணிக்கு வந்து, பொட்டணமாக வீட்டுக்கு எடுத்து வந்து விடுகிறோம். திண்ணைக் கடை வேண்டாம். உங்க கையால் கிடைக்கும் பஞ்சு இட்லிக்கு நாங்கள் எங்கே போவது?”
மகளும் தாயும் நிம்மதியாகிறார்கள். நான்கு நாள் அமைதியாக ஓடிவிட்டது. இட்லி வியாபாரமும் நடக்கிறது. அவளுடைய கடை இட்லி மலிவு விலை; அந்தப் பகுதி முழுதும் பிரசித்தம்.
5 ஆம் நாள், இட்லிகளை நாலு நாலாக சட்னியுடன் வாழையிலையில் வைத்து நடுமாத்தா பொட்டணம் கட்டிக்கொண்டிருக்கிறாள். விடிகாலை நாலு மணி.
ஒரு புயல் கதவை உடைத்துக் கொண்டு வந்தது போல குப்பண்ணா நுழைகிறான்.
“என்ன, இட்லி வியாபாரம் திருட்டுத் தனமாக நடக்கிறதா?” இளக்காரமாகக் கேட்கிறான்.
“இதில் திருட்டு என்ன? எல்லோரும் கேட்டுக் கொண்டாங்க. போலீஸில் உத்தரவு வாங்கித்தான் நடத்தறோம். திருடனுக்குத் திருட்டுப் புத்தி தானே தோனும். நீயும் திருட்டுத் தனமா சாராயம் வித்துட்டு இருக்கியா?” நடுமாத்தாள் கடுப்பாகக் கேட்கிறாள்.
“பேசாதடீ கிழவி. வியாபாரம் படுத்துப் போய் வரும்படி கிடையாது. உன் கிட்ட எவ்வளவு பணம் வச்சிருக்கே? எனக்குக் கொஞ்சம் பணம் கொடு”
“பணத்துக்கு நான் எங்கேடா போறது? உன் பொண்டாட்டி நிறைய சேர்த்து வைச்சிருப்பாளே!”
“வாயை மூடுடி. உன் பென்ஷன் பணத்தை என்ன செஞ்சே?”
“மேலே உத்தரத்தைப் பாரு. சுவரைப் பாரு. எல்லாம் காரை பேந்து இடிந்து போயிருந்தது. எல்லாம் ரிப்பேர் செய்து புது உத்திரம் மாற்றி, சிமென்ட் சுவர் பூசி சுண்ணாம்பு அடிச்சேன். கையில் பைசா இல்லை.”
“பொய் பேசாதடீ. உன் நகை எல்லாம் எங்கே?”
“நகையை அடகு வச்சுத்தான் மேலே செலவானதை சரி கட்டினேன். பெத்த பிள்ளையா ஒரு வேளை சோறு போட உனக்குத் துப்பில்லை. பணம் கேட்க வந்துட்டே.”
கோபமாக, அறையை, அடுக்களையைச் சோதனை போடுகிறான். கயிற்றுக் கட்டிலடி, அலமாரி, தகரப்பெட்டி, அடுக்களைப் பாத்திரங்கள், டப்பாக்களைத் தாறுமாறாக எறிகிறான். எதுவும் அவன் கைக்குக் கிடைக்கவில்லை.
கோபமாகக் கத்துகிறான். “ நீ பணமோ நகையோ கொடுக்காட்டி நீ செத்தால், நான் கொள்ளி போடக்கூட வரமாடடேன்.”
“போடா போக்கத்தவனே. நானே செத்த பிறகு யார் கொள்ளி போட்டாங்கன்னு பார்க்கவா போறேன்? எனக்கு ஒரு பெண்ணும் இருக்கா. எனக்குச் சோறு போட்டுக் காப்பாத்தற மாதிரி கொள்ளியும் போடுவா. போடா நாயே. இந்தப் பக்கம் தலை காட்டாதே” இந்தக் கத்தலும் கோபமும் அவளுடைய நோஞ்சான் உடம்புக்குத் தாங்கவில்லை. ஆடிப்போய் விட்டாள். துணைக்கு ஒருவரைக் கூப்பிடக்கூட வழி இல்லாமல் ஊரடங்கு தடுக்கிறது.
நடுமாத்தா புரண்டு புரண்டு படுக்கிறாள். உடம்பெல்லாம் வெட்டி வலி, இருமல், சளி, காய்ச்சல் அனல் வீசுகிறது. வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் அவளுக்குக் கொரொனா வராது என்று உண்ணாத்தா நம்புகிறாள்.
விடிய விடிய அவதிப்பட்ட நடுமாத்தாவுக்குக் காலையில் மூச்சு விட முடியவில்லை. பயந்து போன உண்ணாத்தா இட்லிக்கடை வாடிக்கையாளர் மாரியப்பனுக்கு ஃபோன் அடிக்கிறாள்.
“அண்ணே, அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலை. ஆஸ்பத்திரி போக ஆட்டோ கிடைக்காது. நான் என்ன செய்யட்டும். வழி தெரியலையே”
”பயப்படாத தாயீ. நான் வரேன்.” மாரியப்பன், ரெட்டியார் பாளையம் செக் போஸ்டில் உத்தரவு வாங்கிக் கொண்டு தன் மோட்டார் சைக்கிளில் வருகிறான்.
“அம்மாவை மடியில் வைத்துக் கொண்டு பின்னாடி உக்காரு தாயீ.” அரசு மருத்துவமனைக்கு வண்டியை ஓட்டுகிறான். காலை ஆறு மணி. மருத்துவமனை வெறிச்சோடிக் கிடக்கிறது.
மருத்துவர் அறையைத் தேடிப் போவதற்குள் எதிர்பட்ட நர்ஸ் நடுமாத்தாளைப் பார்த்த நிமிஷமே, “ இந்தப் பக்கமாகப் பின்புறம் கோவிட் பகுதிக்குப் போங்கள் என்று வழி சொல்கிறாள். அங்கே தென்பட்ட நர்ஸ்,”நோயாளியின் விவரங்கள், விலாசம் எழுதிக்கொடுத்துவிட்டுப் போங்கள். இவரைத் தீவிர சிகிச்சைப் பகுதிக்கு எடுத்துச் செல்கிறோம்.”
“அம்மாவைத் தனியாக விட்டுப் போகணுமா?”
“நீங்கள் ஒருவரும் உள்ளே வரக்கூடாது. இங்கே வெளியே நிற்கக்கூடாது போங்கள். சுகாதாரப் பணியாட்கள் உங்கள் வீட்டைச்சுற்றி உங்கள் தெரு முழுதும் ‘கோவிட் ஏரியா’ என்று நோட்டீஸ் ஒட்டுவார்கள். நீங்களும் கோவிட் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.“
அடுத்த நாள் காலை உண்ணாத்தாவை அழைத்துக் கொண்டு மாரியப்பன் ஆஸ்பத்திரி வருகிறான். விசாரணைப் பகுதியில் போய் நடுமாத்தாவின் உடல் நிலை பற்றி விசாரிக்கிரான்.
“நடுமாத்தா இரவு இறந்துட்டாங்க”
“அவங்க உடலைக் கொண்டு போகலாமா?”
அழுகையினூடே உண்ணாத்தா கேட்கிராள்.
“இதோ பாருங்க, அவங்கள நீங்க பார்க்கக்கூட முடியாது. சவக் கிடங்கில் போட்டிருக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லா உடல்களையும் டிரக்கில் ஏற்றி மின்சார இடுகாட்டுக்கு கரண்ட் வைத்துக் கொள்ளி போட அனுப்பி விடுவோம். இங்கே யாரும் கூட்டம் போடாதீர்கள். போங்கள் வெளியே.”
ப்ளாஸ்டிக் உறையில் தைக்கப்பட்ட உடல்கள் டிரக்கில் வீசி எறியப்படுவதைக் கண்ணீர் வழிய தூரத்திலிருந்து பார்க்கிறாள் உண்ணாத்தா.
நடுமாத்தாவின் குரல் அவள் காதில் ஒலிக்கிறது. “அழாதே ஆத்தா. அந்தப் பாவி கையால் கொள்ளி வாங்காமல் நான் போவதில் எனக்குச் சந்தோசந்தேன். அரசாங்கம் எனக்கு இவ்வளவு வருஷமாக பென்ஷன் கொடுத்து சாப்பாடு போட்டுச்சு. அரசாங்கமே எனக்குக் கொள்ளி போடுகிறது எனக்கு நிம்மதியாக இருக்கு. நீ ஜாக்கிரதையா இரு”
******************