அமைச்சரவைக் கூட்டத்தில், ஆக்கபூர்வ முடிவுகளை முதலமைச்சர் பழனிசாமி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 நேரடிப் பண உதவி, கூட்டுறவு நகைக்கடன்கள் – விவசாயக் கடன்கள் ரத்து, மின்கட்டண சலுகை உள்ளிட்ட ஆக்கபூர்வ முடிவுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிடப்படாத “ஊரடங்கு” அறிவிப்பால்- மாவட்டங்களில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், இன்றைக்குத் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா “கொத்துக் கொத்தாக” பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே மாவட்டங்களில் வாழ்வாதாரப் பிரச்சினை அச்சமூட்டும் வடிவம் எடுத்து, வருமான இழப்பு வரலாறு காணாத வகையில் ஏற்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.