திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிப்பாதைகளாக உள்ளது. இவை மட்டுமில்லாமல் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக சென்று வரும் வகையிலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார்ஷசேவை இப்போது வரையிலும் இருக்கிறது. இந்த ரோப்கார் சேவைக்காக, அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் நிலையங்கள் உள்ளன. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. காற்று அதிகமாக வீசும்போது அதன் சேவை நிறுத்தப்படும். இதேபோல் தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும் பராமரிப்பு பணி நடைபெறும். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடந்ததால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. எனவே மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.