கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் 11 நாட்களுக்கு பின் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிவேண்டும் எனக் கூறி ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின. பின்பு, இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில், 15க்கும் மேற்பட்ட பள்ளிப்பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேஜை, பெஞ்ச்,ஏசி உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன. இந்த கலவரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், மாணவியின் உடல் இரண்டு முறை மறுகூராய்வு (பிரேத பரிசோதனை) செய்யப்பட்டது. இறுதியாக, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் சடலம் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராமத்திற்குள் நுழையும் வாகனங்களின் எண், ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டு சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மாணவியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் உறவினர்கள், கிராம மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.




