திமுக அரசு 2021 தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது இறந்த ஆசிரியருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி 181 ல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். மேலும் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் . அனைத்து பகுதியினர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன் அடிப்படையில் ஜூலை 8 ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிநேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில், இன்று 7 வது நாளாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசுக்கு எதிராக கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் பொழுது , விபத்தில் உயிரிழந்த ஆசிரியருக்கு தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி 181 … ன் படி… பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய பகுதி நேர ஆசிரியர் மணி
ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக மாணவரின் நலனுக்காக பணிபுரிந்து வருகிறோம். ஐந்தாயிரம் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்ட எங்களுக்கு தற்பொழுது 12,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் என்பதை மறந்து, பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181 இன் படி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொடர்ந்து பேசியவர் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் என நிவாரணம் வழங்கும் முதலமைச்சர், மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாமல் வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு பணி நிரந்தர ஆணை கிடைக்கும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.




