சென்னை அருகே நகை கடை உரிமையாளரின் மகனே கடையில் இருந்த தங்கத்தை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் -சுபாஷ் போத்ரா. இருவரும் கூட்டாக சேர்ந்து அப்பகுதியில் நகை கடையை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நகைகளை டிசைன் செய்துகொடுப்பதும், சிறிய வியாபாரிகளுக்கு நகைகளை விற்பனை செய்துகொடுத்தும் வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு கடையின் லாக்கரில் பூட்டி வைத்திருந்த 14 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளது. அதை கண்டு அதிற்சியடைந்த கடை உரிமையாளர்கள் இருவரும், போலீசுக்கு புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது, சம்பவம் நடந்த அன்று கடையின் முன்பு சுபாஷ் போத்ராவின் மகன் ஷார்ஷ் போத்ரா கையில் பையுடன் சுற்றி திரிவதை கண்டனர். அதன்பேரில், அவரை அழைத்து விசாரித்ததில் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், ஆன்லைன் சந்தையில் ஒன்றரை கோடி ரூபாயை இழந்ததால், அதை ஈடுகட்ட கடையில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்ததாக ஹார்ஷ் ஒப்புக்கொண்டார்.
மேலும், சில நாட்கள் கழிந்ததும் கொள்ளையடித்த தங்கத்தை மீண்டும் திருப்பி தர நினைத்ததாகவும் கூறினார். அதையடுத்து ஹார்ஷ்டம் இருந்து 11.5 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹார்ஷ் போத்ராவின் தந்தையான சுபாஷ் போத்ராவும், ராஜ்குமாரும் கடந்த 20 ஆண்டுகளாக நகை கடையை இணைந்து நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலியை மேய்ந்த பயிராக நகை கடை உரிமையாளரின் மகனே கொள்ளையில் ஈடுபட்ட சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.