திருமணமான இரண்டே மாதங்களில் தனது இளம் மனைவியை ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த பணத்தில் செல்போன் வாங்கியதாக ஒடிசாவைச் சேர்ந்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்யப்பட்ட பெண்ணை (மனைவியை) ஒடிசா மாநில காவல்துறையினர் கடந்த வியாழக் கிழமையன்று மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தமது மனைவியை விற்பனை செய்ததாக 17 வயது சிறுவனை கைது செய்துள்ள ஒடிசா மாநில காவல்துறையினர், அந்தச் சிறுவனை சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பலாங்கிர் மாவட்டத்திலிருக்கும் டிக்ராபதா கிராமத்தைச் சேர்ந்த பார்தி ரணா எனும் பெண், தமது கணவரால் தாம் விற்பனை செய்யப்பட்ட பின்பு காவல்துறையினரால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண் பேசும் போது, “திருமணமாகி எட்டு நாட்களுக்கு பிறகு அவர் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை இருப்பதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றார். சுமார் இரண்டு மாத காலத்துக்கு பிறகு என்னை ஓரிடத்தில் விட்டுவிட்டு என் கணவர் எங்கோ சென்றுவிட்டார். பிறகு தான் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு அவர் என்னை விற்பனை செய்துவிட்டார் என்பது தெரிந்தது. என்னை காசு கொடுத்து வாங்கியவர்கள் அவர்களது வீட்டிலும் வயலிலும் வேலை செய்யுமாறு என்னைக் கட்டாயப்படுத்தினர். அங்கு வந்த காவல்துறையினர் என்னை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார் பார்தி.
தம்மை விலைகொடுத்து வாங்கியவர்கள் பாலியல் ரீதியாகத் தமக்கு எந்தத் துன்பத்தையும் விளைவிக்கவில்லை என்றும் பார்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் கணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.