கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் வீ.ஆர்.பி.சத்திரம் அருகில் நேற்று முன்தினம் வெகுநேரமாக லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தது. இதனை கண்ட ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, ரேஷன் அரிசி மூட்டைகள் அதில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, லாரி டிரைவர், கிளினர் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் முனியப்பன் மற்றும் ஆற்காட்டை சேர்ந்த கிளீனர் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கடத்தி கொண்டு வந்த 20 மூட்டைகள் ரேஷன் அரிசியை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் கடத்த பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் தலைவனை வலைவீசி தேடி வருகின்றனர்.