இனிப்பு, மளிகை கடைகளில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடியில் மளிகை கடைகள் பெட்டி கடைகளில் குட்கா பொருட்கள் விற்பதாக அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யனுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து, அவரது உத்தரவின்பேரில் எஸ்.ஐ. விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஆவடி, திருமலைராஜபுரத்தில் உள்ள இனிப்பு கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக தனிப்படை அமைத்து தேடிவந்த போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று நடத்திய அதிரடி சோதனையில் 150 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், அந்த இனிப்புக்கடையின் உரிமையாளர் அண்ணனூர் பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரை பிடித்தனர். மேலும் இதனை தொடர்ந்து ஆவடி, மிட்டனமல்லி, பாலவேடு மெயின் ரோட்டில் உள்ள மளிகைக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு 200 குட்கா போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அதில் சம்மந்தப்பட்ட பொன்ராஜ் என்பவரையும் கைது செய்தனர்.