ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா சென்ற 6 சிறுவர்கள், ஓடையில் குளித்தபோது பரிதாபமாக மூழ்கி உயரிழந்த சம்பவம், அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள பூதேவபேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அருகிலிருக்கும் வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். அவர்களுடன் சென்ற மனோஜ், ராதாகிருஷ்ணன், ரஞ்சித், சிவாஜி, கங்காதர் வெங்கட், புவன் ஆகிய 6 சிறுவர்கள், அங்குள்ள நீரோடை ஒன்றில் குளித்துள்ளனர்.
நீண்ட நேரம் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள், திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் நீரோடையில் மூழ்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உடன் சென்றவர்கள், மூழ்கிய 6 சிறுவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு நீரில் மூழ்கிய 4 பேரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து நடந்த தேடுதலில், மேலும் 2 சிறுவர்களையும் சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா சென்ற இடத்தில், ஒரே நேரத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உயிரிழந்தச் சம்பவத்தால், பூதேவிபேட்டா கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நீரோடையில் மூழ்கி உயரிழந்த 6 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும், அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.