காதலை ஏற்க மறுத்த சிறுமி கொலை
புனே பிபேவாடி என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் சுபம் பகவத் (22) என்ற இளைஞர் தங்கியிருந்தார்.
அதே வீட்டிலிருந்த தனது உறவினரான 8- ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை சுபம் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது காதலை அப்பெண்ணிடம் தெரிவித்து, ஆனால் சிறுமி அதனை நிராகரித்துவிட்டார் என்கின்றனர். இந்த விவகாரம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிய வந்ததைத் தொடர்ந்து பகவத் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பகவத் சிறுமியை பழிவாங்கத் திட்டமிட்டார். இதற்காகத் தனது நண்பர்கள் இருவரைத் துணைக்கு சேர்த்துக்கொண்டு மைனர் பெண் எப்போது வெளியில் செல்கிறார் எந்த வழியாகச் செல்கிறார் என்று கண்காணித்து சொல்ல சொல்லியிருக்கிறார்.
செவ்வாய் கிழமை மாலையில் மைனர் பெண் கபடி விளையாட்டுக்கு பயிற்சி எடுப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். பஸ் நிறுத்தம் அருகில் தனது தோழிகளுடன் அப்பெண் நின்று கொண்டிருந்தார். அந்நேரம் சுபம் பகவத் அங்கு பைக்கில் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் வந்தார். சுபம் பைக்கில் அமர்ந்திருந்த நிலையில் அவருடன் வந்த இரண்டு பேர் அப்பெண்ணிடம் சென்று அவரை தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கின்றனர். இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து 3 பேரும் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு விரைந்து செயல்பட்டு இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் மைனர்கள் ஆவர். முக்கிய குற்றவாளி சுபம் தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் நம்ரதா பாட்டீல் தெரிவிக்கையில், “சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பொம்மை துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்திருக்கிறோம். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.