வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் பள்ளி வளாகத்திலேயே 9ம் வகுப்பு மாணவரும், அவரின் நண்பர்களும் சூழ்ந்து கொண்டு ஆசிரியரை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள ஜூபிலி பள்ளியில் தான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
அந்த பள்ளியின் கணிப்பொறி
ஆசிரியரான சையது வசிக் அலி என்பவர் தனது வகுப்பில் மாணவர் ஒருவர் மொபைல் பயன்படுத்தியதை பார்த்து அந்த மாணவரை இனி வகுப்பில் மொபைல் பயன்படுத்தக் கூடாது என கண்டித்துள்ளார்.
இதனால் அந்த ஆசிரியர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த 9ம் வகுப்பு மாணவர், அவருடைய மேலும் இரு நண்பர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு, பள்ளி வளாகத்தில் தனியாக இருந்த அந்த ஆசிரியரின் முகத்தில் கருப்பு துணியை போர்த்தி, மூவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்திய போது 9ம் மாணவரும், மேலும் இருவரும் சேர்ந்து ஆசிரியரை அடித்து உதைத்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் இருந்ததை பார்த்துள்ளனர். பின்னர் முக்கிய குற்றவாளியான அந்த 9ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். ஆசிரியரை அடித்து உதைத்த மேலும் இரு மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.