பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காத நிலையில், யூகோ வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மராட்டியம், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி ஆகிய 4 வங்கிகளுக்கு 1417 அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடத்த உள்ளது. அதற்கான ஆள் தேர்வு அறிக்கையை கடந்த 4-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 1417 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 382, பட்டியலினம் 212, பழங்குடியினர் 107, உயர்வகுப்பு ஏழைகள் 141 என 842 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், யூகோ வங்கி மட்டும் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 141 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில் ஓர் இடம் கூடுதலாக 142 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 701 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 300, பட்டியலினத்தவருக்கு 196, பழங்குடியினருக்கு 89 என மொத்தம் 585 இடங்கள் மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 82 இடங்கள், பட்டியலினத்தவருக்கு 16 இடங்கள், பழங்குடியினருக்கு 18 இடங்கள் 116 இடங்கள் குறைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.
இந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறை வங்கியை எடுத்துக் கொண்டாலும், அதில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பிரதிநிதித்துவம், இட ஒதுக்கீட்டு விதிகளின்படி இருக்க வேண்டியதை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்படும் சமூக நீதி சூறையாடல். எனவே, இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆள் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை வெளியிட வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்ததற்காக யூகோ வங்கி மீதும், அதன் மோசடிக்கு துணை போனதற்காக வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.