நடிகர் எஸ்.வி. சேகரின் கருத்துக்கும், தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என, தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.வி. சேகர் சமீபத்தில் வெளியிட்டு இருந்த வீடியோவில் அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் அக்கட்சியின் கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என கட்சியின் பெயரை மாற்றுங்கள் என கூறியிருந்தார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதிலடி தந்தார். இதனால் கோபமான எஸ்.வி. சேகர் மீண்டும் வீடியோவில் அதிரடியாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஏதாவது ஒன்றை விளம்பரத்திற்காக பேசிவிட்டு, வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்பவர் தான் எஸ்.வி சேகர் என விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பதிலளித்து பேசியுள்ள பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், “எஸ்.வி சேகர் பேச்சு என்பது அவரின் சொந்த கருத்து மட்டுமே, அதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.