அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்ற வேண்டும்
தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
தன்னிச்சையாக செயல்படும் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துணைவேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பை ஏற்ற பின்னர் சூரப்பாவின் செயல்பாடுகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. மத்திய அரசின் நேரடி முகவர் போன்றுதான் அவரது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு கல்வி நிறுவனம் என்ற சிறப்புரிமையைப் பெறுவது குறித்து முடிவு எடுக்க அமைச்சர் குழு ஒன்றை முதல்வர் அமைத்திருந்தார். அக்குழு கரோனா பேரிடர் காலத்தில் கூடி முடிவு எடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
உயர்சிறப்பு கல்வி தகுதி
இச்சூழலில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு நேரடியாக எழுதி உள்ள கடிதத்தில், பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம், இணைப்புக் கட்டணம் உள்ளிட்ட உள்வளங்களில் இருந்து வரும் வருவாய் மூலம் மாநில அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைப் பெற முடியும் என்று தெரிவித்து இருக்கிறார்.
வெளியேற்ற வேண்டும்
மாநில அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழக அரசின் அனுமதி பெறாமல், மத்திய அரசுக்கு எப்படி நேரடியாகக் கடிதம் எழுதினார்? அல்லது துணைவேந்தர் சூரப்பாவுக்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறதா? இதற்கு தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை வெளியேற்ற அரசு திட்டவட்டமான முடிவு எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கொள்கைக்குக் குந்தகம் நேர்ந்துவிட அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.